மறைமலையடிகள் வரலாறு - மறை.திருநாவுக்கரசு; பக்.784; ரூ.600; மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62; 044- 2637 1643.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளின் பிறப்பில் தொடங்கி (1876) அவரது பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவர், ரா. ராகவையங்கார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ந.சி. கந்தையா, மயிலை சீனி. வேங்கடசாமி முதலிய அறிஞர்களோடு அவருக்கிருந்த தொடர்பு, அவர் எழுதிய ஆய்வு நூல்கள் போன்ற பல தகவல்களோடு அவரது இறுதிக்காலம் வரை (1950) நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
தனது பதினைந்தாம் வயதில் முறைப்படி தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கிய அடிகளார், தனது இருபத்தொன்றாம் வயதிற்குள், தொல்காப்பியம், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவையார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், நன்னூல் விருத்தி, தொல்காப்பிய சூத்திரவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் முதலான பல தமிழ் நூல்களை முழுவதும் நெட்டுரு செய்துகொண்டதோடு அவற்றைப் பற்றி சிறந்த சொற்பொழிவுகளையும் ஆற்றியிருப்பது வியப்பளிக்கும் செய்தி.
இவரது "மாணிக்கவாசகர் காலம்' தமிழின் குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூல். 1929இல் "சித்தாந்தம்' இதழில் "சமயச்சீர்திருத்தம்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை இந்நூலில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. அடிகளார் எழுதிய நூல்களின் பட்டியல் இந்நூலில் இடம்பெறாதது ஒரு குறையே.