Enable Javscript for better performance
நூல் அரங்கம்- Dinamani

சுடச்சுட

  நூல் அரங்கம்

  By dn  |   Published on : 08th February 2016 01:48 AM  |   அ+அ அ-   |    |  

  24

  எண்ணங்கள்... அனுபவங்கள்... பள்ளிக் கல்வி மாற்றங்கள்- ந.ராமசுப்ரமணியன்; பக்.224; ரூ.150; நடேசன் சாரிட்டிஸ், சென்னை- 45; )044- 2226 6614.
   நமது கல்வி முறையின் சிக்கல்கள் எவை? நமது பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை? கல்வித்துறையை நமது அரசுகள் புறக்கணிக்கின்றனவா? அனைவருக்கும் கல்வி வெற்றுக் கனவு தானா? அடிப்படை பள்ளிக் கல்வியின் சரிவு உயர்கல்வியை எவ்வாறு பாதிக்கிறது? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்குப் பதில் அளிக்கும் விதமாக நூல் எழுதப்பட்டுள்ளது.
   தமிழக பள்ளிக் கல்வியின் குழப்பமான நிலைக்கு சமச்சீர் கல்வி மாற்றாகுமா? சிபிஎஸ்இ பள்ளிகள் பெருகுவதன் மர்மம், மாற்றப்பட வேண்டிய பாடத்திட்டங்கள், கல்வி தனியார் மயம், மாணவர்களிடையே தலைதூக்கும் வன்முறை, தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என நமது கல்விமுறை எதிர்கொள்ளும் பல சவால்களை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர்.
   அரசுப் பள்ளிகளின் தரமின்மையால் தனியார் பள்ளிகள் புற்றீசலாக முளைத்தன என்பதைக் குறிப்பிடும் நூலாசிரியர், தரமான கல்வி அளிப்பதில் அரசின் பொறுப்புணர்வு குறைந்து வரும் பிரச்னைக்கு, கல்வியைத் தனியார் மயமாக்குவதே தீர்வு என்று கூறுகிறார். அரசுப் பள்ளிகளைத் தரமானதாக மாற்ற வேண்டிய அரசு, தனது கடமையைத் தனியார் தோளில் சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ள இக்கருத்து உதவும் ஆபத்து உள்ளது.
  சிவப்புச் சந்தை - ஸ்காட் கார்னி; தமிழில்: செ.பாபு ராஜேந்திரன்; பக்.304; ரூ.250; அடையாளம், புத்தாநத்தம்; )04332- 273 444.
   மனித உயிரைக் காக்க ரத்ததானம், உடல் உறுப்பு தானம், கண்தானம் போன்றவை தற்போது பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆனால், சட்டத்துக்குப் புறம்பான உடல் சார்ந்த தசை வர்த்தகம் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
   அதிலும் குறிப்பாக, மேற்கத்திய வளர்ந்த நாடுகளின் அதீதத் தேவைகளை நிறைவேற்ற, இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவிலான கள்ள வர்த்தகர்கள் செயல்படுகிறார்கள். உடலுறுப்பு தொடர்பான ரகசிய வர்த்தகத்தை நூலாசிரியர் ஸ்காட் கார்னி "சிவப்புச் சந்தை' என்று குறிப்பிடுகிறார்.
   அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு இதழாளரான ஸ்காட் கார்னி, தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் அபாயகரமான வகையில் அலைந்து திரிந்து பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
   கல்லறையில் திருடுபவர்கள், எலும்புப் பொறுக்கிகள், சிறுநீரகங்களைத் திருடுபவர்கள், கார்னியாவைக் களவாடும் மருத்துவர்கள், மனித உடலில் சுரண்டப்படும் தோல்கள், சொற்பக்காசுக்காக ஆபத்தான மருந்துகளைத் தங்கள் உடலில் பரிசோதனை செய்து கொள்ளும் அப்பாவிகள், சர்வதேச அளவிலான தத்தெடுக்கும் தேவைகளுக்காகக் கடத்தப்படும் குழந்தைகள் உள்ளிட்ட பல அதிர்ச்சிதரும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர்.
   ரத்தம், உடலுறுப்புகள் போன்றவற்றை தானம் அளிப்பவரின் பெயரும் பெறுபவர் பெயரும் ரகசியமாக வைக்கப்படக் கூடாது; வெளிப்படையான தானமே சட்ட விரோத வர்த்தகத்தைத் தடுக்கும் என்கிறார். நேர்த்தியான பதிப்பும், தடையற்ற மொழிபெயர்ப்பும் நூலைத் தொடர்ந்து வாசிக்க வைக்கின்றன.
  இன்றைய விவசாயம் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.110; ரூ.85; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை-98; )044 - 2624 1288.
   தினமணி, ஜனசக்தி நாளிதழ்களில் 2010-2011 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இன்றைய விவசாயத்தின் தன்மைகளை இவ்வளவு துல்லியமாகவும், சமூக அக்கறையுடனும் வேறு யாராவது விவரிக்க முடியுமா? என்பது ஐயமே.
   நூலில் இடம் பெற்றிருக்கும் முதல் கட்டுரையில் சுதந்திரத்துக்கு முன்பு விவசாயத்தின்நிலை, சுதந்திரத்துக்குப் பின்னுள்ள இன்றைய விவசாயத்தின்நிலை ஆகியவற்றைப் பற்றிய விமர்சனப்பூர்வமான வரலாறு கூறப்பட்டிருக்கிறது. "நவீன விவசாயம், ஏமாற்றும் மாற்றுப் பயிர்த்திட்டத்துக்குப் பலியாகிவிட்டது. வாஷிங்டனில் யோசிக்கப்பட்டு இந்தியாவில் செயலாகிறது... நவீன விவசாயத்தில் நிகழும் விதை மோசடிக்கு விவசாயிகள் பலியானதுடன், மான்சண்டோ, கார்கில் போன்றவர்களின் ஏகபோகத்தில் காய்கறி விவசாயம், பருத்தி விவசாயம் பறி போய்க் கொண்டுள்ளது' என்கிறார்.
   விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், விவசாயிகளின் இயலாமையைப் பயன்படுத்தி, விளைநிலங்களைத் தரிசாக்கி, ரியல் எஸ்டேட்காரர்கள் கைப்பற்றுவது, பி.ட்டி பருத்தியால் ஏற்படும் தீமைகள், இந்தியாவே மரபணு மாற்றம் தொடர்பான விஷப் பரீட்சையின் கூடாரமாகிவிட்ட மோசமானநிலை ஆகியவற்றைப் பற்றிய நூலாசிரியரின் கருத்துகள், இயற்கை விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான தேவையை வலியுறுத்துகின்றன. சமூக அக்கறையும், இயற்கை விவசாயத்தில் ஆர்வமும் உள்ள அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.
  காலம்தோறும் நரசிங்கம் - பண்பாட்டுக் கட்டுரைகள் }ஜடாயு; பக்.204; ரூ.130; தடம் பதிப்பகம், சென்னை; 94459 01234.
   பண்பாட்டுக் கட்டுரைகள் என்ற உபதலைப்புக்கு ஏற்ப, பாரத ஹிந்துப் பண்பாடு தொடர்பான விழுமியங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. வாழும் பிள்ளை என்ற தலைப்பிலான முதல் கட்டுரை, மகாகவி பாரதியின் விநாயக தரிசனத்தை விண்டுரைக்கிறது. அடுத்த கட்டுரை, அமெரிக்க எழுத்தாளர் மார்க் மார்ஃபோர்டு வியந்து போற்றும் அம்பலவாணனாகிய நடராஜர் பற்றியது. மகாத்மா காந்தி கண்ட ராமராஜ்ஜியம், கிராமராஜ்ஜியமே என்ற விளக்கம், தன்னைத் தோற்ற பின் என்னைத் தோற்றாரா என்று திரெளபதி எழுப்பிய மறக்கவொண்ணா கேள்வி, மூவித தொன்ம அடுக்குகளில் மூழ்கியுள்ள ஐயப்ப சரிதம், சேவை என்ற போர்வையில் நடத்தப்படும் மதமாற்றங்கள், ஹிந்துத்துவம் என்ற கோட்பாடு வளர்ந்த விதம், சாதீய உடைப்பிலும் சமூக ஒற்றுமையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கு, அப்துல் கலாமின் நினைவுகள், ராமாயணம், மகாபாரதம் என விரிவான பல விஷயங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்நூலாசிரியர் எளிமையாகவும் ஏற்கும் விதத்திலும் எழுதியிருக்கிறார். நூல் தலைப்பிலான காலம்தோறும் நரசிங்கம் கட்டுரை, பல்வேறு காலகட்டங்களில் நரசிம்மர் வழிபாடும், சிற்பவடிவங்களும் மாற்றம் பெற்று வருவதை விவரிக்கிறது. முத்தாய்ப்பாக, வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டதாக சிலரால் கூறப்படும் (சைவ) சித்தாந்த குழப்பத்துக்கு இறுதிக் கட்டுரை உறுதியான முற்றுப்புள்ளி வைக்கிறது.
  அண்ணா அருமை அண்ணா - ஜி.விசுவநாதன்; பக்.144; ரூ.90; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 2682.
   வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனரான நூலாசிரியர், தமிழகத்தின் முன்னாள் முதலைமைச்சர் அண்ணாதுரையின் சிறப்புகளை இந்நூலில் சுவைபடத் தொகுத்துச் சொல்லியிருக்கிறார். எனினும், தமிழகத்தின் அன்றைய அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
   காங்கிரஸ் எதிர்ப்பாளரான அண்ணாதுரை வேலூரில் காந்தி சிலையைத் திறக்கும்போது, அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. சிலையைத் திறந்து வைத்து அவர் சொன்னதுதான் "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்ற புகழ்பெற்ற வாக்கியம்.
   பெரியார் சுதந்திரதினத்தை "துக்கநாள்' என்று அறிவித்தார். அப்போது அண்ணாதுரை அதை மறுத்து, ""திராவிடர் கழகத்தவராகிய நாம் அன்னிய ஆட்சியாகிய ஆங்கில ஆட்சி கூடாதென்பதை 1939 ஆம் ஆண்டிலிருந்து சொல்லி வந்திருக்கிறோம். நம்மை மற்ற கட்சியினர் ஏகாதிபத்திய தாசர்கள் என்று கூறியதும் வீண்பழி என்று எடுத்துக் காட்டி அன்னிய ஆட்சி நீங்க வேண்டும். அதுதான் நமது விருப்பம் என்று சொல்லி வருகிறோம்'' என்று கூறியதை நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
   அதுபோல, திராவிட நாடு கேட்ட அண்ணாதுரை, சீனா, இந்தியா மீது படையெடுத்தபோது நேருவின் நடவடிக்கைகளைப் பாராட்டவும் அவரை ஆதரிக்கவும் தயங்கவில்லை என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
   அண்ணாதுரை என்ற தலைவரைப் பற்றி புதிய கோணத்தில் விளக்கும் சிறந்த நூல்.
   
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp