தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள்

தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள் - ப.முத்துக்குமாரசுவாமி; பக்.500; ரூ.435; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14;  044-2813 2863. 
தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள்

தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள் - ப.முத்துக்குமாரசுவாமி; பக்.500; ரூ.435; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14;  044-2813 2863. 

சைவ சமயம் மிகவும் தொன்மையானது.  நால்வர் பெருமக்கள் அவதாரம் செய்து,  சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் - மாதொரு பாகனாக, அம்மையப்பராக இருக்கிறார் என்றும், அவரை அடைய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை நெறிகளை மேற்கொண்டால் முக்தி பெறலாம் என்பதையும்; செந்தமிழ்ப் பாக்களால் இறைவனைப் பாடிப்பரவி, அப்பாடல்கள் மூலம் பல அற்புதங்களையும் நிகழ்த்தினர். அவர்களுள் மாணிக்கவாசகரைத் தவிர மற்ற மூவரும் அருளியவை "தேவாரம்' எனப்படும்.

தேவார மூவர்கள் தங்கள் பாடல்கள் வழி பக்திச் சிந்தனைகளையும்,  மக்கள் நல்வழியில் சென்று, உய்தி பெறும் பொருட்டு  சமுதாயச் சிந்தனைகள் பலவற்றையும் பாடியுள்ளதையெல்லாம் இந்நூல் விரித்துரைக்கிறது.

மூவர் தேவாரங்களிலும், சிவனுருவம், திருவடியின் சிறப்பு, திருவருளின் திறம், திருவெண்ணீற்றின் மகிமை, அஞ்செழுத்தின் பெருமை, ஆண்டான்- அடிமை முறை, இறைத்தொண்டின் மேன்மை, பூசனை முறைகள், நால்வகை நெறிகள், சிவனடியார்களின் பக்தியின் திறம், திருத்தலங்களின் மாண்பு, மக்களின் வாழ்க்கை முறை, அரசர்களின் அளப்பரிய தொண்டு, அறச்சிந்தனைகள் முதலியவை கூறப்பட்டுள்ளன.  இவை தவிர, அவர்கள் செந்தமிழ்ப் பாக்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் எடுத்துரைக்கிறது. 

இவ்வாறு சித்தத்தைச் சிவமாக்கி செய்வனவற்றைத் தவமாக்கி "எல்லாம் இறைவன் செயல்' என்று இறைவனின் திருவருளில் அழுந்திய தேவார ஆசிரியர்கள் உலக உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு, அறியாமையின் காரணமாக மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) எனும் நோயில் விழுந்துகிடந்து சீரழிந்து போவதைக் கண்டு மனங்கலங்கி,  அவர்கள் உய்தி பெறும் பொருட்டு இறைவன் ஆணையின் வண்ணம் அருளிய அருமருந்துதான் தேவாரப் பாக்கள். 

தேவார ஆசிரியர்கள் அறிவுறுத்திய திருநெறியக் கொள்கைகள் தொடங்கி, தேவாரங்களில் இடம்பெற்றுள்ள திருத்தலங்கள், பன்னிரு திருமுறையின் வரலாறு, தேவார ஆசிரியர்களின் காலம், சங்க நூல் பதிவுகள்,  வேதங்கள், வள்ளுவம் ஆகியவை தேவாரத்தில் உள்ள விதம், வைப்புத்தலங்கள், மூவர் நிகழ்த்திய அற்புதங்கள் முதலியவை உள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com