ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம்; பக்.496; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை; ) 044- 2434 2810.
ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம்; பக்.496; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை; ) 044- 2434 2810.
 தமிழகம் நன்கறிந்த கவிஞரான முத்துலிங்கம் தனது திரைப்பட அனுபவங்களை தினமணி நாளிதழில் தொடராக எழுதினார். அதில் வெளி வந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சிவகங்கைக்கு அருகில் உள்ள கடம்பங்குடி என்ற கிராமத்தில் பிறந்த முத்துலிங்கம், திரைப்படப் பாடல் எழுதும் ஆர்வத்தால் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியடைந்ததும், மீண்டும் தேர்வு எழுதும்போது "மணிமேகலை' என்ற திரைப்படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு மறுநாள் எழுதிய தேர்வில் தோல்வியடைந்ததும், அதன்பிறகு தமிழ் வித்வான் படிப்பையும் முழுமையாகப் படிக்காமல் சென்னைக்கு வந்ததும்கதைபோல விரிந்தாலும், அவரின் இளமைக்கால பாடல் எழுதும் ஆர்வம் வியக்க வைக்கிறது.
 "பொண்ணுக்குத் தங்கமனசு' என்ற திரைப்படத்துக்காக முதல் பாடல் 1973 - இல் எழுதியதும், அந்தப் பாடலை இளையராஜா இசையமைத்ததும், எம்.ஜி.ஆரிடம் நல்ல பெயர் வாங்கியதும், எம்.ஜி.ஆர். நடித்த "நினைத்ததை முடிப்பவன்' திரைப்படத்தில் அவருக்காக முதல் பாடல் எழுதியதும், அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் முத்துலிங்கம் நிறையப் பாடல்கள் எழுதியதும் பதிவாகியுள்ளன.
 "கிழக்கே போகும் ரயில்' படத்துக்கு "மாஞ்சோலைக் கிளிதானோ' என்ற பாடல் எழுதிய அனுபவம், மாந்தோப்பு என்றுதானே சொல்ல வேண்டும்; மாஞ்சோலை என்பது சரியா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டது, "முந்தானை முடிச்சு' படத்துக்காக பாடல் எழுதும்போது இரவு பத்தரை முதல் விடிகாலை 4 மணி வரை பாக்கியராஜ் "வேலை' வாங்கியது, சிவாஜிகணேசன் நடித்த 7 படங்களுக்குப் பாடல்கள் எழுதியது, இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் 45 படங்களுக்குப் பாடல் எழுதியது என நூலாசிரியரின் சுவாரஸ்யமான அனுபவங்கள் அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
 தான் வாழ்கிற காலத்தின் திரைப்படப் பாடலாசிரியர்களான வாலி, கண்ணதாசன், வைரமுத்து, நா.முத்துக்குமார் ஆகியோரைப் பற்றி மட்டுமல்லாமல், உடுமலை நாராயண கவி, மருதகாசி, கா.மு.செரீப், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை ராமையாதாஸ், புலமைப்பித்தன் என பல திரைப்படப் பாடலாசிரியர்களைப் பற்றியும், இன்றைய இளம் கவிஞர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் சார்ந்த கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள இந்நூல், எதிர்காலத்தில் ஒரு வரலாற்று ஆவணமாக மதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com