பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான் - அன்பு ஜெயா; பக்.272; ரூ.200; காந்தளகம், 4, முதல் மாடி, இரசிகா கட்டடம், 68, அண்ணா சாலை, சென்னை-2
பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான் - அன்பு ஜெயா; பக்.272; ரூ.200; காந்தளகம், 4, முதல் மாடி, இரசிகா கட்டடம், 68, அண்ணா சாலை, சென்னை-2.
 மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ்பெற்றது - பிரமபுரம், தோணிபுரம், காழி, கழுமலம், சீகாழி என்றெல்லாம் போற்றப்படும் சீர்காழி திருத்தலம். சைவத்துக்கு மட்டுமல்லாமல் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இத்திருத்தலத்திற்குக் காரணப் பெயர்களாக 12 பெயர்கள் உள்ளன. இப்பன்னிரண்டு திருப்பெயர்களும் பன்னிரண்டு யுகங்களில் விளங்கி வந்த பெயர்கள் என்று பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.
 வேதநெறி தழைத்தோங்கவும், சைவம் மேன்மை கொள்ளவும் அவதரித்த திருஞானசம்பந்தரால் புகழ் பெற்றது சீர்காழி. "எனதுரை தனதுரையாக' என்று ஞானசம்பந்தர் உறுதியாகக் கூறுவதால், திருஞானசம்பந்தர் வாக்கு அனைத்தும் இறைவன் திருவாக்கே ஆகும். அம்மையப்பராக, தோடுடைய செவியனாக ஞானசம்பந்தருக்குக் காட்சி கொடுத்து இறைவன் பிரம்மபுரம் மேவிய காரணத்தால், முதல் பாடலிலேயே (தோடுடைய செவியன்) "பிரம்ம புரமேவிய பெம்மான் இவனன்றே' என்று நமக்கு இறைவன் திருவுருவைச் சுட்டிக்காட்டினார் திருஞானசம்பந்தர். அந்த அருள் வாக்கையே நூலுக்குத் தலைப்பாக்கி இருப்பது அற்புதம்.
 சீர்காழி திருத்தலத்தின் சிறப்பு, கோயிலின் அமைப்பு, திருத்தலத்தின் திருப்பெயர்கள், தீர்த்தங்களின் மகிமை, தோணிமலை, வடுகநாதர், சட்டநாதர் தோன்றிய வரலாறு, பெரியபுராணத்தின் அடிப்படையில் திருஞானசம்பந்தரின் வரலாறு, கல்வெட்டுகள், திருவிழாக்கள், பூஜைகள், மேற்கோள் திருப்பதிகள் என ஒன்றையும் விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
 சைவ சமயக் குரவர் மட்டுமல்லாமல், சீர்காழியோடு தொடர்புடைய அனைத்து தமிழ்ச் சான்றோரையும் சிறப்பித்திருப்பது நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com