தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
By ராஜ் கெளதமன் | Published On : 24th June 2019 01:25 AM | Last Updated : 24th June 2019 01:25 AM | அ+அ அ- |

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்- ராஜ் கெளதமன்; பக்.420; ரூ.370; நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை; 044 - 2625 1968.
அறம் என்ற ஒற்றை கருப்பொருளை மையமாகக் கொண்டு அதனைப் பல கோணத்தில் விளக்கிக்கூறும் நூல் இது. சங்க கால இலக்கியம் தொட்டு சமகாலச் சூழல் வரை மக்கள் மனதில் வேரூன்றப்பட்ட நெறிகள் அனைத்தையும் மேற்கோள்களைக் காட்டி வரையறுக்கிறார் நூலாசிரியர்.
கலித்தொகை, நாலடியார், ஐங்குறுநூறு, திருக்குறள் என தமிழ் மொழியின் மாண்பைப் பறைசாற்றும் இலக்கியங்கள் அனைத்தும் அறத்தை எவ்வாறு அறிவுறுத்துகின்றன? என்பது விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அறம் தோன்றிய வரலாற்றையும், அதன் நீட்சியாக சங்க காலம், பக்தி இலக்கிய காலம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும், இலக்கியத் தரவுகளோடு எடுத்துரைத்திருப்பது கூடுதல் சிறப்பு. சோழர் கால பண்பாடுகள் குறித்த அரிய தகவல்களும் நூலில் இழையோடுகின்றன.
தொல்காப்பியர், வள்ளுவன், கம்பன், பரிமேலழகர், நீட்சே, ஓஷோ போன்ற அகிலம் போற்றும் சான்றோர்களது படைப்புகளின் ஊடே பயணித்து அறத்தின் பரிணாமங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, கல்வி, பாலியல், துறவு, சான்றாண்மை, வணிகம் என பல்வேறு தலைப்புகளின்கீழ் நெறிகளை விளக்கியிருப்பது நல்முயற்சி. அற மரபுகளின் ஆணிவேரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆய்வு நூல் இது என்றால் மிகையல்ல.