சுடச்சுட

  
  nl2

  சொல்லாய்வுகள் - வய் .மு. கும்பலிங்கன்; பக்.176; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044-2536 1036.
   ஓரெழுத்து ஒரு மொழி, ஒரு பொருள் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்பது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். ஒரு சொல்லில் ஓர் ஒற்று இல்லையென்றால் அதன் பொருளே மாறிப் போய்விடும் அபாயம் தமிழில் உண்டு. அதேபோல, பொருள் மாறுபாடான- வேறுபாடான பல சொற்கள் தமிழில் உண்டு. அத்தகைய சொற்களின் பொருளை அறியாமலேயே அவற்றை நாம் அன்றாடம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பது இந்நூலைப் படிக்கும்போது நன்கு விளங்குகிறது. அத்தகைய சொற்களை ஆராய்ந்தறிந்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
   "கும்' மும், "சும்'மும், உடல் உறுப்புகள் குறித்த சொற்களுக்கான விளக்கம், ஒற்றெழுத்தின் சிறப்பு, பொத்தகம்-புத்தகம், கண்ணன் - கன்னன்; வலியுறுத்தல்- வற்புறுத்தல்; துவக்கம் -தொடக்கம்; மாறுபாடு-வேறுபாடு; "கது' குறித்த ஆய்வு; ஆகிய-முதலிய பயன்படுத்தும் இடங்கள்; ரத்தம்- அரத்தம் முதலிய சொற்களுக்கான விளக்கம் குறிப்பிடத்தக்கவை.
   "பொதுவான வழக்குச் சொல் குறித்த ஆய்வுகள்' என்கிற பகுதியில், அம்மி, அடாப்பழி, அறிவன், அத்தன், அண், அரவம், அமட்டல், ஆரம், ஆம், ஆவது, ஆளர், இட்டவி, ஊழல், வல்லி-வள்ளி, மங்கலம்-மங்களம்; பிதற்றல்-பினாத்தல்; பழக்கம் -வழக்கம் முதலிய 90- க்கும் மேற்பட்ட சொற்களுக்கான விளக்கமும், பொருள் மாறுபாடு உள்ள சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும்;
   "தேர்வோம்- தெளிவோம்' பகுதியில் பெரியரும்-சிறியவனும்; கூத்தாடியும்- கூலிக்காரனும்;, பதரும்-பதடியும்; அரிவாள்-அறுவாள்; அறிவிப்பு-அறிவிக்கை; இயம்-இசம் முதலிய சொற்களின் விளக்கமும் அனைவரும் அறிந்து கொள்ளத்தக்கவை.
   "பிழை இல்லாமல் தமிழ் எழுதுவோம்' பகுதியில், நாதன்-னாதன்; வேணும்-வேனும்; நர்-னர்; டின-டிண முதலியவற்றின் பயன்பாடுகள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எடுத்துக்காட்டாக - "இராமநாதன், வடுகநாதன், உலகநாதன், விசுவநாதன் முதலியவையே சரி. தந்நகரத்திற்குப் பதிலாக றன்னகரம் போட்டு இராமனாதன், வடுகனாதன் என எழுதுவது தவறு' என்கிறார் நூலாசிரியர்.
   தமிழில் எந்தெந்த சொற்களுக்கு ஒற்று வரவேண்டும் என்பது தெரியாமலும், ன-ண -ந; ர-ற; தடுமாற்றத்துடனும் எழுதிப் படிக்கும் அனைவர் கையிலும் இருக்க வேண்டிய நூல். தமிழில் ஏற்படும் இத்தகைய தடுமாற்றங்களை எல்லாம் போக்கி, தவறில்லாமல் எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறது இந்நூல்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai