மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி - சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு - இராம் பொன்னு; பக்.480; ரூ.250; சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை -1; ) 0452- 2341746.
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி - சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு - இராம் பொன்னு; பக்.480; ரூ.250; சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை -1; ) 0452- 2341746.
 வரலாற்றுப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார்.
 காந்தியின் பிறப்பு, கல்வி, சட்டக் கல்லூரியில் படிப்பதற்காக லண்டன் சென்றது, படிப்பு முடித்து இந்தியா திரும்பி வந்து பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டது, இந்திய நிறுவனம் ஒன்றிற்காக வழக்குரைஞராகப் பணி செய்ய தென்னாப்பிரிக்கா சென்றது, நேட்டாலில் நீதிமன்றத்தில் காந்தி அணிந்திருந்த டர்பனை நீதிபதி அகற்றச் சொன்னது, காந்தி மறுத்தது, நிறவெறி காரணமாக காந்தியை வெள்ளையர்கள் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்காமல் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது, தென்னாப்பிரிக்காவில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது, 1915 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியது என காந்தியின் இந்திய சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அவருடைய தென்னாப்பிரிக்க போராட்ட வாழ்க்கை அமைந்து இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
 இந்தியா திரும்பிய பிறகு கோகலேயின் விருப்பப்படி, காந்தி ஓராண்டு காலம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்திய மக்களின் நிலையைத் தெரிந்து கொண்டது, அதன் பிறகே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது என்பன போன்ற பல செய்திகள் வியப்பளிக்கின்றன.
 காந்தி உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொண்டதற்கான காரணங்கள் அரசியல்ரீதியானவை மட்டுமல்ல. ஃபீனிக்ஸ் ஆசிரமத்தில் இருந்த ஒழுக்கக் குறைவைக் கண்டித்து, ஆசிரமவாசி ஒருவர் புகைபிடித்ததைக் கண்டித்து கூட உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
 பகத்சிங்கை தூக்கில் போடாமல் இருக்க காந்தி ஆங்கிலேயரைக் கேட்டுக் கொண்டது, அவரது கோரிக்கை எடுபடாமல் போனது, இந்தியப் பிரிவினைக்கெதிரான காந்தியின் போராட்டங்கள், தீண்டாமை ஒழிப்புக்கான அவருடைய செயல்பாடுகள் என காந்தி என்கிற மாபெரும் மனிதரின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கூடவே அந்த மாபெரும் மனிதரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்த இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com