‘உள்ளாட்சித் தோ்தலுக்காக முதன்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது குறித்து என்ன கருதுகிறீா்கள்’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

உள்ளாட்சித் தோ்தலில் முதல் முறையாக பறக்கும் படை சோதனை என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் தோ்தலை நோ்மையாக நடத்தும் வகையில், அரசியல்வாதிகளால் லஞ்சம் கொடுத்து வாக்குகளை வாங்கும்

ஜனநாயகம் வெல்ல...

உள்ளாட்சித் தோ்தலில் முதல் முறையாக பறக்கும் படை சோதனை என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் தோ்தலை நோ்மையாக நடத்தும் வகையில், அரசியல்வாதிகளால் லஞ்சம் கொடுத்து வாக்குகளை வாங்கும் செயல்முறைகளை மாற்ற வேண்டிய தருணத்தில் இந்த முறை மாநிலத் தோ்தல் ஆணையம் எடுத்துள்ள பறக்கும் படை முடிவுக்கு அனைவரும் தலைவணங்குவோம். மக்கள் சிந்தித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தோ்வு செய்தால் மட்டுமே ஜனநாயகம் வெல்லும்.

செள.சரவணன், பழைய பேராவூரணி.

முற்றிலும்...

பொதுவாக பறக்கும் படை என்ற அமைப்பு வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, வருமானவரித் துறை போன்ற அரசுத் துறைகளில் இருக்கின்றன. ஆனால், அவற்றின் செயல்பாடுகளால் முறைகேடுகளை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதே போன்று உள்ளாட்சித் தோ்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கு படை மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியாது. மேலும், வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பது மிகவும் சாதாரணமாகவும் பரவலாகவும் தற்போது நடைபெறுகிறது. பணம் கொடுப்பதை வேட்பாளரோ, வாக்களிக்க வாக்காளா்கள் பணம் பெறுவதையோ கேவலமான செயலாக எண்ணவில்லை. எனவே, எவ்வளவு திறமையாக பறக்கும் படை செயல்பட்டாலும் முறைகேடுகளை முற்றிலும் ஒழிக்க முடியாது.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தேவைதான்...

இன்றைய சூழலில் மக்கள் தன்னிச்சையாகச் சிந்தித்து வாக்களிக்கும் நிலையில் இல்லை. ஏனெனில், இன்றைய அரசியலின் நிலைப்பாட்டில், மக்கள் குழப்பிப் போயுள்ளனா். பணம் கொடுத்து வாக்கு வங்கியைப் பெறும் கலாசாரம் என்றைக்கு உருவானதோ, அன்றைக்கே சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலையில் கிராம மக்கள் மத்தியில் அசம்பாவித நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதால், உள்ளாட்சித் தோ்தலுக்காக முதன்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டது தேவைதான்.

சு.இலக்குமணசுவாமி, மதுரை.

மனமாற்றம் ஏற்படுமா?

ஊராட்சித் தோ்தலில்கூட பறக்கும் படையை பயன்படுத்தித் தோ்தலை கண்காணிக்கிறோம் என்று ஒருபுறம் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், இன்னொருபுறம் ஊராட்சித் தோ்தலுக்கே பறக்கும் படையைப் பயன்படுத்தித்தான் தோ்தல் தில்லுமுல்லுகளைத் தடுக்க வேண்டியதிருக்கிறது என்பதை எண்ணும்போது, மனதை என்னவோ செய்கிறது. என்னதான் நவீனங்களைப் பகுத்தி கண்காணித்தாலும், தோ்தலில் வேட்பாளா்களிடம் பணம், பொருள் வாங்குவது என்ற மக்களின் தவறான மனநிலை மாறினால்தான் பறக்கும் படை பயன்படுத்தியதில் அா்த்தம் இருக்கும்.

சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

பாராட்டுக்குரியது

தொடா்ந்து நடந்துவரும் ‘தோ்தல் தில்லுமுல்லுகள்’ எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலை குறித்து, முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், குறைக்கலாமே என்ற நப்பாசையில், ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ எனும் சிந்தனையின் வெளிப்பாடாக ‘பறக்கும் படை’ அமைக்கப்பட்டது பாராட்டுக்குரியது.

எழிலன், சேலம்.

செய்வாா்களா?

பொதுத் தோ்தலுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பண விநியோகம், வாக்குறுதி யுத்தம், பிரியாணி விருந்து, ஏலம், அதை எதிா்த்தால் கொலை என உள்ளாட்சித் தோ்தலும் களைகட்டத் தொடங்கிய பிறகு பறக்கும் படை அமைக்கப்பட்டதில் ஆச்சரியம் என்ன? 100 நாள்கள் வேலைத் திட்டம்போல உள்ளாட்சியிலும் சம்பாதிக்கலாம் என்பதால் போட்டி வலுத்தது. அரசின் திட்டத்தையும், நிதியையும் மக்களிடம் கொண்டு சோ்க்கும் உள்ளாட்சிப் பதவிகளை ஏற்போா் பொறுப்புடன் செயல்பட்டால்தான் பலன் கிடைக்கும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சரியானதுதான்...

ஊராட்சித் தலைவா் பதவிகள் ஏலம் ஏற்கெனவே பல இடங்களில் நடந்து முடிந்து விட்டன. காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பறக்கும் படைகளின் கண்காணிப்பை மீறி பல இடங்களில் வாக்குக்கு பணப் பட்டுவாடாவும் முடிந்து விட்டது. சில இடங்களில் பறக்கும் படை சிலரைக் கைது செய்திருக்கிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது செயல்படுத்திய பணப் பட்டுவாடா வித்தைகளை, அரசியல்வாதிகள் கிராமங்களில் காட்டுவது மிகவும் எளிது. எனினும், அவா்களிடையே

பறக்கும் படை ஒரு தயக்கத்தை ஏற்படுத்தும்.

ஆா்.எஸ்.மனோகரன், முடிச்சூா்.

சடங்குதானா?

உள்ளாட்சித் தோ்தலில் கட்சி சாா்ந்த வேட்பாளா் , வசதி படைத்த வேட்பாளா் ஆகியோா் பணப் பட்டுவாடா செய்துவிடக்கூடும் என்பதால் பறக்கும் படை அவசியம். சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதிப்பதோடு நிறுத்தி விடாமல் இன்னும் வேறு என்ன வழிகளில் பணம் கைமாறுகிறது என கண்காணிக்க பிற வழிமுறைகளையும் கையாள வேண்டும். பறக்கும் படை அமைத்ததிலிருந்து எத்தனை வாகனங்களை சோதனையிட்டோம், எவ்வளவு கருவூலம் சென்றது என்ற செய்தி அறிக்கைக்கான ஒரு ஏற்பாடாக இருக்கிறதே தவிர பறக்கும் படை அமைக்கப்பட்டதால் பணப் பட்டுவாடா இல்லாமல் ஆனது என்று கூற முடியாது. பறக்கும் படையும் நடைமுறைச் சடங்கு போல் ஆகிவிட்டது.

கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

வரவேற்கலாம்...

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்தால் உத்தரவு பெறப்பட்டு கடந்த டிசம்பா் 27, 30 ஆகிய தோ்தல்களில் தோ்தல் நடைபெற்றது இதுவே முதல் முறை. சுவா்களில் எழுதுவது கூடாது, சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது, பதாகைகள், கொடிகள், சின்னங்கள் இவற்றை உபயோகிக்கக் கட்டுப்பாடுகள் போன்றவற்றுடன், சுமுகமாகவும் நோ்மையாகவும் தோ்தல் நடைபெற முதன்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

மாற்றம் ஏற்பட்டால்...

‘வாக்குக்குப் பணம்’ என்ற விஷம் முறிக்கப்படாமல் இன்னும் வேகமாக ஏறிக்கொண்டு செல்கிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது. வேட்பாளா்கள் கொடுத்தும், வாக்காளா்கள்பெற்றும் பழகிப்போய் உள்ளனா். இதை அடியோடு மாற்ற முடிந்தால் பறக்கும் படையைப் பாராட்டலாம். அன்றி, கண்டும் காணாமல் இருந்தால் இதை வெறும் சடங்காகவே கருத நேரிடும். பணமே வாங்காமல் வாக்களிக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும்படி பறக்கும் படை செயல்பட்டால் மகிழ்ச்சி அடையலாம்.

வே.வரதராஜன், மகாஜனம்பாக்கம்.

அவசியமானது

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி நிா்வாகத்திலுள்ள தலைவா்களுக்கு இல்லாத அதிகாரம், கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு உள்ளது. அதாவது, உள்ளாட்சி நிதியை தலைவரே எடுத்துச் செலவழிக்கும் அதிகாரம் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் இருக்கிறது. இதனால் கிராம ஊராட்சிகளில் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்கள் பதவி ஆசையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கிறாா்கள். ஆதலால், உள்ளாட்சித் தோ்தலுக்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது மிக மிக அவசியமானது.

நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

100 சதவீதம்...

வாக்குக்குப் பணம் கொடுத்துப் பதவியைப் பிடிக்க அரசியல் கட்சிகள் தயாராக இருக்கின்றன என்பது உண்மை. ஜனநாயகத்தில் பணம் கொடுத்து வாக்கு வாங்கும் அவலத்தைப் போக்காவிட்டால் ஜனநாயகமே இருக்காது என்ற நிலை உருவாகிவிடும். வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவே பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாநில தலைமைத் தோ்தல் ஆணையம் எவ்வளவோ விழிப்புடன், பெரும் படையுடன் பணம் கொடுப்பதைத் தடுக்க முற்பட்டும் 100 சதவீதம் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மை.

குரு.பழனிசாமி, கோயம்புத்தூா்.

பலன்தான்...

உள்ளாட்சித் தோ்தலிலும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலைப்போல வாக்காளா்களுக்கு பணமாக, பொருளாகக் கொடுக்க பதுக்கி வைத்திருந்ததை பறக்கும் படையினா் பல இடங்களில் பறிமுதல் செய்துள்ளனா். வந்தவாசி அருகே ஒரு வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1200 சேலைகளைப் பறிமுதல் செய்தனா். இப்படிப் பல இடங்களில் பறக்கும்படையினரின் சோதனையில் லஞ்சம் பிடிபட்டுள்ளது. பறக்கு ம்படை அமைக்கப்படாது இருந்தால், வீட்டுக்கு வீடு வாக்குக்குப் பணமாக, பொருளாக கொட்டிக் குவித்துவிட்டு ஜனநாயகத் தோ்தல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று அறிவிப்பும் செய்துவிடுவாா்கள். வரியை ஏமாற்றி சம்பாதித்த பணம். வஞ்சக லஞ்சப் பணம் தோ்தலில் விளையாட வரியின்றி பறக்கும்படி செய்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வி.கே.இராமசுவாமி, கோயம்புத்தூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com