தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள் - பொன்னீலன்; பக்.232; ரூ.220; டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78; )044-4855 7525.
தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள் - பொன்னீலன்; பக்.232; ரூ.220; டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78; )044-4855 7525.
 உலகில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் மனநிலை, பண்பாடு, ஆதிக்கத்தன்மை, அடிமைத்தளை, பொருளாதாரநிலை, உணர்ச்சிகள், ரசனைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாவல்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், பன்முகத்தன்மைகளுக்கும் கூட இந்த மாற்றங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன.
 இந்த அடிப்படையில் தமிழில் தோன்றிய முதல் நாவலான "பிரதாப முதலியார் சரித்திரம்' தொடங்கி, சமகாலத் தமிழ் நாவல்கள் வரை இந்நூல் அறிமுகம் செய்வதுடன், நாவல்களின் உள்ளடக்கம், அவை தோன்றுவதற்கான சமூகப் பின்புலம், நாவல்களின் பேசுபொருள், நாவலாசிரியரின் வாழ்க்கைக் கண்ணோட்டம், நாவல்கள் சொல்லப்பட்டவிதம், அவற்றில் செயற்படும் இலக்கியக் கோட்பாடுகள் என விரிவாக அலசி ஆராய்கிறது.
 நூலாசிரியரின் வாழ்க்கைக் கண்ணோட்டத்துக்கு எதிரான கருப்பொருள்களை உடைய நாவல்களில் காணப்படும் சிறப்பான தன்மைகளையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. சுந்தரராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்', "ஜே ஜே சில குறிப்புகள்', ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்' , க.நா.சு.வின் "பொய்த்தேவு' ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
 நீல பத்மநாபன், சு.சமுத்திரம், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், ராஜம் கிருஷ்ணன், சிவகாமி, இமயம், சு.வெங்கடேசன், சோ.தர்மன், சுப்ரபாரதி மணியன், டி.செல்வராஜ், கு.சின்னப்பபாரதி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, பா.விசாலம், சு.தமிழ்ச்செல்வி, ரவீந்திர பாரதி உள்ளிட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் இந்நூலில் உள்ளன. வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையே உள்ள தொடர்புகளை பல கோணங்களில் ஆராய்ந்து மென்மையான தொனியில் தனது கருத்துகளை நூலாசிரியர் முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com