தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம் - ச.சுப்புரெத்தினம்; பக்.256; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம் - ச.சுப்புரெத்தினம்; பக்.256; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
 தமிழ் மொழியின் பேரிலக்கண நூலான தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியுள்ளவர் பனம்பாரனார். அகத்தியரின் பன்னிரு மாணாக்கர்களுள் ஒருவர் என்று அறியப்படும் இவர், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கருமாவார்.
 தொல்காப்பியர் பெளத்தவராகவோ ஜைனராகவோ இருக்கலாம் என்பது டாக்டர் பர்ணல் என்பாரின் கருத்து. தொல்காப்பியர் சித்தாந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு நூலில் குறிப்பு உள்ளது. பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கருத்து, தொல்காப்பியர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பதுமாகும்.
 தொல்காப்பியத்துக்கு ஏராளமான உரைகள் இதுவரை வெளிவந்துள்ளன. 1847 - இல் மழவை மகாலிங்க ஐயர் " எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்' என்ற பெயரில் முதன்முதலாக தொல்காப்பியத்தை அச்சில் கொண்டு வந்தார்.
 1858 - இல் சாமுவேல் பிள்ளை " தொல்காப்பிய நன்னூல்' என்ற தலைப்பில் தொல்காப்பிய மூலமும் நன்னூல் மூலமும் தந்துள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளை, பு.கந்தசாமி முதலியார் போன்றோரும் தொல்காப்பிய உரைகளைப் பதிப்பித்துள்ளனர்.
 இந்நூல் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கான உரையாக வந்துள்ளது. "கிளவியாக்கம்' தொடங்கி, " எச்சவியல்' வரையிலான ஒன்பது பகுதிகளும் தனித்தனியே சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
 நூற்பாவை தடித்த எழுத்துகளிலும் உரையைத் தடிமனற்ற எழுத்துகளிலும் பதிப்பித்திருப்பது, மூலத்தை மட்டும் படிக்க விழைவோருக்கும் உதவியாக இருக்கும். நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை தெளிவாக பெரிய எழுத்துகளில் அச்சிட்டிருப்பது சிறப்பு.
 இலக்கணம் என்றாலே விலகி ஓடும் மாணவர்களை இலக்கணத்தின் பக்கம் திரும்ப வைக்க இதுபோன்ற எளிய இலக்கண உரைகள் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com