நாகா சரித்திரம்
By DIN | Published On : 19th July 2021 12:44 PM | Last Updated : 19th July 2021 12:44 PM | அ+அ அ- |

நாகா சரித்திரம் - வாழும்போதே வரலாறு-நரேன்; பக்.224; ரூ.100; நீல் கிரியேட்டர்ஸ், சூளைமேடு, சென்னை-94.
சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஏசியா பசிபிக்கின் தலைமை மேலாளர் நாகராஜனின் வாழ்க்கை குறித்த புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்காக நாகராஜன் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து பேசுகிறார் நூலாசிரியர். நாகராஜனின் குடும்பம், பிரபலங்களுடனான அவருடைய நட்பு, அவரது வாழ்க்கையின் திருப்புமுனைகள் என அவருடைய வாழ்வின் முக்கிய தருணங்கள் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இடையிடையே கதைகள், சம்பவங்கள், கவிதைகள் மூலமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணிக்கிறது புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்களையும் பொது நீரோட்டத்துடன் இணைத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளதை நூல் வலியுறுத்துகிறது. அது தவிர பொது அறிவுத் தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
"மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு திறன் குறைவு தான். ஆனால் திறமை குறைந்தவர்கள் அல்ல...' என்பது போன்ற அக விழி திறக்கும் அருமையான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. மனவளர்ச்சி குன்றியவர்கள், அவர்களுக்கான விளையாட்டு உலகம் ஆகியவற்றை நோக்கிய நாகராஜனின் வழிகாட்டுதலை விளக்குவதாய் இருக்கிறது இந்நூல்.