தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள் - டி.வி. ராதாகிருஷ்ணன்; பக்.120; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; )044-2434 2810. 
தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள் - டி.வி. ராதாகிருஷ்ணன்; பக்.120; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; )044-2434 2810.
சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை பெண்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், ஆண் எழுத்தாளர்களை விட பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. இதற்கு பெண்களின் குடும்பச் சூழ்நிலை, சமூகத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம், குடும்பத்தாரே எதிர்ப்பு தெரிவிப்பது, நேரமின்மை, சுதந்திரமின்மை முதலிய பல காரணங்களைக் கூறலாம்.
இத்தனையையும் தாண்டி அன்றைக்கு ஓரளவு படித்த பெண்கள் சிலர் சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பிலிருந்தே எழுதியதோடல்லாமல், சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். இவர்களில் சிலர் மருத்துவராக, ஓவியராக, பேராசிரியையாக, ஜோதிடராக, கலை விமர்சகராக இருந்துள்ளனர். அப்படியே அவர்கள் எழுதிப் புகழ் பெற்றாலும், அதனால் ஏற்படக்கூடிய பொறாமை, காழ்ப்புணர்வு, ஆணாதிக்கப் போக்கு முதலிய காரணங்களால் அவர்களின் எழுத்தும், புகழும் வெளிவராமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி எழுதிப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்கள் பலரையும், வெளிச்சத்துக்கு வராத சிலரையும் இந்நூல் வெளியுலகுக்கு அடையாளம் காட்டுகிறது.
இத்தனை இடையூறுகளையும் எதிர்கொண்டு எழுதிப் பிரபலமான சிலரது படைப்புகள் சாகித்ய அகாதெமி மற்றும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றதுடன், அவர்களுடைய நாவல்கள் பல திரைப்படங்களாகவும் வெளியாகி பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெண் எழுத்தாளர்கள் உளவியல், நகைச்சுவை, துப்பறிவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், குழந்தை வளர்ப்பு, சாதி மறுப்பு, குடும்பக் கட்டுப்பாடு, தீண்டாமை, தேவதாசி ஒழிப்பு, பெண் விடுதலை, நாட்டு விடுதலை முதலியவற்றை எடுத்துரைத்துள்ளனர்.
துப்பறியும் புதினம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி (1901) தொடங்கி, ருக்மணி பார்த்தசாரதி (சூடாமணியின் சகோதரி) வரை மிகவும் பிரபலமான பதினாறு பெண் எழுத்தாளர்கள் பற்றி விரிவாகவும்; அதிகம் வெளிச்சத்துக்கு வராத எண்வர் பற்றிச் சுருக்கமாகவும்; மேலும், அனுராதா ரமணன் தொடங்கி, (1947) ரமணி சந்திரன் வரையிலான எழுத்தாளர்கள்; இறுதியாக "மேலும் சிலர்' என்கிற தலைப்பில் மூவர் பற்றியும் வெகு சுருக்கமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இத்தகைய பெண் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் அன்றைய தினமணி கதிர் இதழில் இடம்பெற்று புகழ்பெற்றன என்பது கூடுதல் சிறப்பான தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com