நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்
By DIN | Published On : 01st November 2021 02:35 PM | Last Updated : 01st November 2021 02:35 PM | அ+அ அ- |

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம் - வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்; பக்.464; ரூ.396; திருப்புகழ்ச் சங்கமம், 5/3, (பழைய எண்.11), இரண்டாவது அவென்யூ, விரிவு - ஐஐ, இந்திரா நகர், சென்னை-600 020.
கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன், இறைவியைப் போற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.
தமிழகத்துக் கோயில்கள் மட்டுமல்லாது, திருவேங் கடம், காஷ்மீர், காசி, இமயமலை போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் தீட்சிதர்.
இவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை.
இந்நூலில் தீட்சிதர் 66 தலங்களில் பாடிய 301 கிருதிகளை இணைத்துள்ளார் நூலாசிரியர். பெரும்பாலான கிருதிகளுக்குப் பொருளுரையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தலத்தோடும் தொடர்புடைய தேவார, திருப்புகழ் பதிகங்களையும் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.
தீட்சிதரின் பெரும்பாலான கீர்த்தனைகளில் இறைவன், இறைவி பெயர் இடம் பெற்றிருக்குமே தவிர, அந்தத் தலத்தின் பெயர் கூறப்பட்டிருக்காது. இதனால் அது எந்தத் தலத்தைப் பற்றிய பாடல் என்பதை அறிவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் பல ஊர்களில் இறைவன் இறைவிக்கு ஒரே மாதிரியான பெயர்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்நூலாசிரியர் இதனை ஆய்வு செய்து, தீட்சிதரால் பாடப்பட்டதாக இதுவரை கூறப்பட்டு வந்த சில தலங்களின் பெயர்கள் பிழையானவை என்பதை இந்நூலில் நிறுவியிருக்கிறார்.
தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக கீர்த்தனையான "தண்டாயுத பாணிம்' எனத் தொடங்கும் கீர்த்தனை பழனி தண்டாயுதபாணி மீது பாடப்பட்டதாகவே பல நூல்களிலும் காணப்படுகிறது. ஆனால் அக்கீர்த்தனை திருவாரூர் தலத்தில் உள்ள முருகனைப் பற்றிப் பாடியது என்று கூறுகிறார்.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் இயற்றியுள்ள கிருதிகளின் தொகுப்பாக வந்துள்ள இந்நூல், இசைக்கலைஞர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும் நல் விருந்தாகும்.