பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும் - சொ.சேதுபதி; பக்.240; ரூ.225; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510. 
பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும் - சொ.சேதுபதி; பக்.240; ரூ.225; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.
 12-ஆம் நூற்றாண்டில் ஒளவையாரால் எழுதப்பட்ட ஆத்திசூடியையும், இருபதாம் நூற்றாண்டில் பாரதியாரால் எழுதப்பட்ட புதிய ஆத்திசூடியையும் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
 ஒளவையார் ஆத்திசூடி மூலமும் உரையும் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் புதிய ஆத்திசூடியின் ஒவ்வொரு வரிக்கும் பொருளுரை, விளக்கவுரை, மேற்கோள் பாடல்கள் என பலவும் தரப்பட்டுள்ளன.
 ஒளவையாரின் ஆத்திசூடி நூலுக்கு முன்னோடியாய் அமைந்தது ஐந்தாம் நூற்றாண்டில் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட "முதுமொழிக் காஞ்சி; (ஓரடிப் பாடல்களைக் கொண்ட அறநூல்) என்பது பலரும் அறியாத செய்தி.
 பாரதியாரின் புதிய ஆத்திசூடிக்கு விளக்கம் அளித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதில் மொழி முதலில் வந்த எழுத்துகள், மொழி முதலில் வாரா எழுத்துகள், வடசொல் இடம் பெறும் விதம், ரகர எழுத்துகள் வந்தவிதம் ஆகியவற்றையும் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர்.
 ஒளவையாரின் ஆத்திசூடியிலிருந்து பல இடங்களில் மாறுபட்டிருக்கும் பாரதியாரின் புதிய ஆத்திசூடி சில நேரெதிரான கருத்துகளையும் கொண்டிருக்கிறது (முனைமுகத்து நில்லேல் - முனையிலே முகத்து நில்). இதனையும் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். இதன் மூலம் ஒளவை அறம் பாடினார் என்பதும், பாரதியார் புதிய அறம் பாட வந்த அறிஞன் என்பதும் புலப்படுகிறது.
 பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுச்சேரியில் எழுதப்பட்டது என்பதை பாரதிதாசனின் கட்டுரை வழியே அறிய முடிகிறது.
 முதன்முதலில் 1913 - ஆம் ஆண்டு பாரதியாரின் புதிய ஆத்திசூடி மூன்று பைசா விலையில் வெளியிடப்பட்ட செய்தி வியப்பளிக்கிறது.
 புதிய ஆத்திசூடி விளக்கத்துக்கான மேற்கோள் பாடல்களாக தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள் போன்ற நூல்களிலுள்ள பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது.
 பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவருக்கான சிறப்பான அஞ்சலியாகும் இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com