சிலப்பதிகாரத்தில் அறம்
By DIN | Published On : 01st August 2022 12:54 PM | Last Updated : 01st August 2022 12:54 PM | அ+அ அ- |

சிலப்பதிகாரத்தில் அறம் - கா. ஆபத்துக்காத்தபிள்ளை - பக். 248; ரூ. 200; வானதி பதிப்பகம், சென்னை -17; 044-24342810.
இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் உள்ள பல்வேறு அறங்கள் குறித்த தகவல்களை புதிய பரிமாணத்தில் அறியத் தருகிறது இந்நூல்.
அறக்கோட்பாடும் சிலப்பதிகாரமும், வாழ்வியல் அறங்கள், அரசியல் அறம், ஊழ்வினைவழி அறம், பாத்திரப்படைப்புகள் வழி அறம், கிளைக்கதை வழி அறம், (இயற்கைக்கு அப்பாற்பட்ட புனைவான) இயற்கைப் புனைவுவழி அறம் போன்ற ஒன்பது தலைப்புகளிலான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
சிலப்பதிகாரக் காலத்திலிருந்த சமயங்கள் என்னென்ன, அவற்றின் செல்வாக்கு எத்தகையது, அந்த மதங்களுக்கு இடையே நல்லுறவு இருந்தவிதம் போன்றவற்றை "சமய நல்லிணக்கம்' என்ற கட்டுரையும், பல்வேறு கடவுள் வழிபாடுகள் இருந்த அக்காலத்தில், 'உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்' என்ற வரிக்கேற்ப பத்தினிக் கடவுள் என்னும் பொதுவழிபாட்டுக்கு சிலப்பதிகாரம் இட்டுச் செல்வதை 'பத்தினிக் கடவுள் எனும் பொதுவழிபாடு' என்ற கட்டுரையும் விரிவாகவும், ஆழமாகவும் பேசுகின்றன.
சிலப்பதிகாரத்தில் அறங்கள் தொடர்பான தரவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில், தொல்காப்பியம், புறநானூறு, பரிபாடல், குறள், சீவகசிந்தாமணி உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்து மட்டுமின்றி கம்பராமாயணத்திலிருந்தும் எண்ணற்ற அடிகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.
கோவலன்-கண்ணகி-மாதவி என பிரதானமான மூன்று கதைமாந்தர்களைக் கொண்டு படைக்கப்பட்ட ஒரு காப்பியத்தில் இவ்வளவு அறச் சிந்தனைகள், ஆழ்க்கடலுக்குள் அமைதியான முத்துகளைப்போல மறைந்துள்ளனவா என வியப்பு மேலிடச் செய்கிறார் நூலாசிரியர்.