வள்ளலார்-வைகுண்டர் படைப்புகளில் சமூக நிலை
By DIN | Published On : 01st August 2022 12:44 PM | Last Updated : 01st August 2022 12:44 PM | அ+அ அ- |

வள்ளலார்-வைகுண்டர் படைப்புகளில் சமூக நிலை - க.வாணிஜோதி; பக். 184; ரூ. 180; சங்கர் பதிப்பகம், சென்னை- 49; 044- 2650 2086.
ஆய்வு நெறியாளர் வ.ஹரிஹரனின் வழிகாட்டுதலின்படி, முனைவர் பட்ட ஆய்வேட்டையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். வடலூரில் வாழ்ந்த வள்ளலார் (1823- 74), சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதுநெறி கண்டவர். இவரது பாடல்கள் 'திருவருட்பா' வாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. சாமித்தோப்பில் வாழ்ந்த அய்யா வைகுண்டர் (1816- 51), 'அய்யாவழி' என்ற வழிபாட்டு முறையை உருவாக்கியவர். இவரது பாடல்கள் "அகிலத்திரட்டு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இருவரும் ஒரே காலகட்டத்தில் செயல்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள். தங்கள் காலத்தில் நிலவிய அரசுகளின் அராஜகப்போக்கு, மூடநம்பிக்கை, ஜாதி, மதப் பிரிவினைகளுக்கு எதிராக ஆன்மிக அடிப்படையில் மக்களைத் திரட்டி ஜோதி வழிபாட்டை நிறுவியவர்கள். புலால் தவிர்த்தல், சைவ உணவை வலியுறுத்தல், காணிக்கை தவிர்த்தல், பக்தியில் ஆடம்பரத்தை ஒதுக்குதல், ஆண்-பெண் சமத்துவம், பசிக்கொடுமை போக்குதல் ஆகியவற்றில் ஒத்த சிந்தனையுடன் செயல்பட்டிருப்பதை வாழ்க்கை நிகழ்வுகளும் காட்டுகின்றன. வள்ளலாரின் ஞானசபை, சாமித்தோப்பில் பதி ஆகியவற்றில் உருவ வழிபாடின்றி, நிலைக்கண்ணாடியும் ஜோதியும் நிறுவப்பட்டன.
சமய உணர்வு கடந்து, படைப்புகளின் வழிநின்று, இருவரும் நிகழ்த்திய மாற்றங்களை இந்நூலில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பொருத்தமான மேற்கோள்கள், பிழையற்ற எளிய தமிழ்நடை, தெளிவான அச்சாக்கம் என நூல் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருக்கிறது.