வேலு நாச்சியார்
By DIN | Published On : 01st August 2022 12:45 PM | Last Updated : 01st August 2022 12:45 PM | அ+அ அ- |

வேலு நாச்சியார்- கே.ஜீவபாரதி; பக் 224; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 24353742.
ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் புகுந்து வீரமரணத்தைத் தழுவிய ஜான்ஸி ராணியின் புகழ் பரவியிருக்கிறது. ஆனால், அவருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த நாட்டை மீட்ட வேலு நாச்சியாரை தமிழர்கள் கவனம் கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என்பதை நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
தந்தை, மாமனார், கணவர் ஆகியோரை இழந்து நின்றபோதிலும், வீரம் இழக்காமல் எதிரியை விரட்டியவர் வீரமங்கை. ராமநாதபுரம் அரண்மனையில் பிறந்த அவர் சிலம்பப் போட்டியில் ஆசிரியருடன் சண்டையிட்டு வெல்வதில் தொடங்கி, இழந்த நாட்டை மீட்டு, மகாராணியாக முடிசூட்டிக் கொண்டதோடு முதல் பாகம் முடிகிறது.
வரி கொடுக்க மறுக்கும் சிவகங்கை, ராமநாதபுரப் பகுதிகளை நயவஞ்சகமாகக் கைப்பற்ற நினைக்கும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியில் முத்து வடுகநாதர் மரணமடைகிறார். பின்னர், வெள்ளச்சி அம்மாள் என்ற தனது ஒற்றை மகளுடன், வேலுநாச்சியார் பத்து ஆண்டுகளுக்குள் இழந்த மண்ணை மீட்டெடுப்பதை விவரிக்கிறது.
திண்டுக்கல் சென்று ஹைதர் அலியை வேலுநாச்சியார் சந்தித்து உதவி கோரும்போது, உருது மொழியில் பேசுகிறார்; ஆங்கிலேயர்களிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்பதைப் பார்க்கும்போது, மகத்தான ஆளுமையை உயர்த்திப் பிடிக்கின்றன. அவரைப் பற்றி இளைய தலைமுறை அறிய அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. இந்த நூலை மூன்று மாணவர்கள் இளநிலைப் பட்டத்துக்கு ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளதும் சிறப்பு. அதில் ஒருவருடைய ஆய்வேடு நூலாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.