காந்திஜி ஒரு சகாப்தம்
By DIN | Published On : 06th June 2022 01:24 PM | Last Updated : 06th June 2022 01:24 PM | அ+அ அ- |

காந்திஜி ஒரு சகாப்தம் - எம்.குமார்; பக்.256; ரூ.250; வானதி பதிப்பகம், சென்னை-600017; 044- 24342810, 24310769.
காந்தியின் இளமைப் பருவம் முதல் இறுதிக்காலம் வரையிலான முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
அவரது வாழ்நாளில் மிகக் கடுமையானதாக இருந்த கடைசி 15 மாதங்கள், அவரை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள், கோட்சேவின் வாக்குமூலம், கோட்சே ஒப்புக்கொண்ட உண்மைகள், கஸ்தூர்பாவின் கடைசி நிமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை இந்நூல் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
தனது செயலாளரான மகாதேவ்தேசாய் மரணமடைந்தபோது காந்தி கண்ணீர் விட்டு அழுதது, மூத்த மகன் ஹரிலால் காந்திக்கும் தனக்கும் இடையேயான பிணக்குகளும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி தன்னுடைய மகன்களை முறையாக வளர்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு இந்த நூலில் தகுந்த பதில் தரப்பட்டுள்ளது.
மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஹரிலால் காந்தியை திருத்தி, அவரை சத்யாகிரக போராட்டங்களில் ஈடுபடுத்த காந்தி எவ்வளவோ முயன்றார். ஆனால் தவறான சகவாசம், ஊதாரித்தனம் காரணமாகக் கடைசிவரை அவரால் தன் தந்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.
தாராளமயமாக்கல், நுகர்வு கலாசாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நாம், காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளை ஏன் கடைப்பிடிக்க மறந்துவிட்டோம் என்ற கேள்வி நம்முள் எழுகிறது. பொருத்தமான படங்களை ஆங்காங்கே பதிவு செய்திருப்பது இந்நூலின் சிறப்பு.