பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினை

பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினை

பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினை - பி.ஆர். அம்பேத்கர்- (தமிழில்)  பி.ஆர். மகாதேவன்;  பக். 552; ரூ. 600; கிழக்கு பதிப்பகம், சென்னை -14;  044 - 42009603. 

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில், 1940-களில், பாகிஸ்தான் என்றொரு தனிநாடு வேண்டும் என்ற லாகூர் தீர்மானத்தை முஸ்லிம் லீக் நிறைவேற்றியபோது, பெரும் அதிர்வலைகள்  ஏற்பட்டதுடன் விவாதப் பொருளாகவும் மாறியது. இந்தத் தருணத்தில் பம்பாய் மாகாணத்திலிருந்த,  சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் நிர்வாகக் குழு  கூடி, எத்தகைய அணுகுமுறையைக் கைக்கொள்வது என்று ஆலோசித்ததுடன், விரிவான ஆய்வறிக்கையைப் பெற வல்லுநர் குழுவை நியமித்தது. இந்தக் குழுவுக்குத் தலைவர் பி.ஆர். அம்பேத்கர்.
மிகப் பெரிய ஆய்வு ஆவணமாக மாறிவிட்ட இந்த அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த நூல்.  பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்ப்பு.

நூல்கள், சந்திப்புகள், அறிக்கைகள், தலைவர்களின் நிலைப்பாடுகள், வரலாற்று ஆவணங்கள், ஆய்வுகள்,  புள்ளிவிவரங்கள் என ஏராளமான தரவுகளின் துணைகொண்டு எழுதப்பட்டிருக்கிறது.  ஹிந்துக்கள்,  முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பு வாதங்களைத் தெளிவாக முன்வைத்திருக்கிறார் அம்பேத்கர்.

இவை தவிர, மகாத்மா காந்தி, சாவர்க்கர், ஜின்னா ஆகியோர் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்கள் என்பதையும் விளக்கிவிடுகிறார்.  துருக்கி, செக்கோஸ்லோவேகியா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பாடங்கள் பற்றி விவாதிக்கும் அம்பேத்கர், நாடுகள் பிரிந்தால்தான் ஹிந்துஸ்தானத்துக்கு வலுவான  அரசு கிடைக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

சமூகத்தின் தேக்க நிலையைக் குறிப்பிடும்போது 1940-களின் நிலைமையில், 'இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல்  வாழ்க்கையிலும் ஒரு தேக்க நிலையே நிலவுகிறது, முஸ்லிம்களின் பிரதான விருப்பம் மதத்தின் மீதே இருக்கிறது' என்கிறார். ஆய்வறிக்கையின் முடிவும் நாட்டின் பிரிவினைக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், பிரிவினையால் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை மட்டும் இன்றைய சூழலில் பொய்த்துப் போய்விட்டது எனலாம்.  வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com