முகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்
சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு
By DIN | Published On : 14th March 2022 09:20 AM | Last Updated : 14th March 2022 09:20 AM | அ+அ அ- |

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு- பெ.சுப்பிரமணியன்; பக்.170; ரூ.160; காவ்யா, சென்னை- 24; 044-2372 6882.
ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார்.
சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆய்ச்சியர் குரவைப் பகுதியிலும் அந்த மக்களின் வாழ்வில், சகுனங்கள், சடங்குகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. அந்த வகையில், உலகளாவிய நிலையில் ஆயர் வாழ்வு புதிய கற்காலத்துடன் தொடர்புடையதாக இருப்பதையும், ஆயர் குலப் பெண்கள் ஆடிய கூத்து மிகப் பழைமையானதாகவும், கூத்தின் மரபுப்படி அமைந்திருந்ததையும் அறிய முடிகிறது. மிகப் பழைமையான கொற்றவை, மயோன் - சேயோன் பற்றிய வழிபாட்டுக் குறிப்புகள் அகழாய்வு தரவுகள்படி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில் 53 வகையான நாட்டுப்புறப் பாடல்களை எடுத்தாண்டது, கேரளத்தின் பகவதியம்மன் வழிபாட்டுடன் பத்தினி வழிபாட்டின் தொடர்பு, யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு, ரோகிணி திருமணத்துக்கு சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.