தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920; வடகரை செல்வராஜ்; பக்.720; ரூ.630; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; 044-29999611.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக 12,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்,1920 எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம்தான் நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகும். இந்த நூலில் நகராட்சிகள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணி என்ன? அவர்களுக்கான அதிகாரங்கள் எவை? என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில் பொதுமக்கள் இந்தச் சட்டத்தைப் பின்பற்றி அந்தந்த அதிகார அமைப்புக்கு எவ்வாறு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இவைதவிர நகராட்சிகள், பேரூராட்சிகள் தொடர்பான 13 சட்டங்கள், விதிகளும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
இவைதவிர, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நகராட்சிகள் குறித்து என்ன கூறுகிறது என்பதை அறிய வேண்டியது அவசியமாகும். அந்தத் தகவல்களும் முதல் அத்தியாயத்திலேயே இடம் பெற்றுள்ளன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்களின் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டியது இந்தச் சட்டப் புத்தகம்.