முகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்
தம்மபதம்
By DIN | Published On : 09th May 2022 11:07 AM | Last Updated : 09th May 2022 11:07 AM | அ+அ அ- |

தம்மபதம் - பெளத்த அறநூல் - மொழி பெயர்ப்பு: நல்லி குப்புசாமி செட்டியார்; பக். 80; ரூ.75; ப்ரெய்ன் பேங்க், சென்னை 17; 98410 36446.
பழைய நீதிநூல்களான அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, பர்த்ருஹரியின் நீதி சதகம், இன்னா நாற்பது இனியவை நாற்பது, வியாச கீதை போன்றவற்றுக்கு எளிய தமிழில் விளக்க நூல்கள் எழுதியது போன்று தம்மபதத்துக்கும் எளிய தமிழில் நூலாசிரியர் விளக்கம் தந்துள்ளார். பாலியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு, பின்னர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதிலிருந்து ஜெர்மனி தத்துவஞானி மாக்ஸ்முல்லரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூலை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
பெளத்தம், சமணம் இரண்டின் தாய் மதம் ஹிந்து மதம் என்றபோதிலும், சமய நம்பிக்கைகளில் வித்தியாசம் இருக்கிறது. அதன்படி ஊக்கம், சிந்தனை, ஆன்மா, மகிழ்ச்சி, இன்பம், துன்பம், கோபம், குற்றம், துறவு, நரகம் உள்ளிட்ட 26 தலைப்புகளில் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 421 நெறிகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. 'பகைமை விலகாது; பகைமை உணர்வு இருக்காது', 'புண்ணிய காரியங்களை உடனுக்குடனே செய்திட வேண்டும். தாமதித்தால் மனம் பல காரியங்களில் ஈடுபட்டுவிடும்' , 'தண்டனைக்கும் மரணத்துக்கும் மக்கள் பயப்படுகிறார்கள்', 'நோய் உண்டு; எண்ணங்களும் உண்டு. இதற்கு வலிமை இல்லை' போன்ற வரிகள் படிக்கப் படிக்க உத்வேகத்தையும், வாழ்க்கை வாழ்வதன் அவசியத்தையும் விளக்குகிறது.
எதிர்மறையாக ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்வது மனதில் புரிய வேண்டும் என்பதற்காகவே என்று உரைக்கத்தக்க வகையில் இந்த நீதிநெறிமுறைகள் அமைந்துள்ளன என்கிறார் நூலாசிரியர். பிற மதங்களில் சொல்லப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அறிமுக நூல்தான் தம்மபதம்.