ஞங்கள் அம்மையுடே பர்த்தாக்கள்

ஞங்கள் அம்மையுடே பர்த்தாக்கள்

ஞங்கள் அம்மையுடே பர்த்தாக்கள் (எங்கள் அம்மாவின் கணவர்கள்) - ஜ்வாலா முஹி ராஜ்; பக்.462; ரூ.400; யூஎம்ஐ புக் பேங்க், சென்னை -109;  9043050699.

ஆதியிலிருந்து தாய் வழிச் சமூகமாகவே மனித நாகரிகம் இருந்தது. வம்ச விருத்திக்காக வந்து சேரும் ஆண், வம்ச விருத்திக்குக் காரணமானவன் என்பதால் "காரணவன்' எனப்பட்டான். பெற்றெடுக்கும் முதல் பெண் குழந்தைக்கு, தாய்க்குப் பிறகு வாரிசு உரிமை வந்து சேரும். இளம்பெண்ணாக இருக்கும்போதே காரணவன் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து சென்றாலோ அடுத்ததாக ஒருவனை அவள் மறுமணம் செய்துகொள்ள முடியும்.  அந்தப் பெண் தனியாகவும் வாழலாம். இந்த முறைக்கு "மருமக்கள் தாயம் வாரிசு வழிமுறை' என்று பெயர்.

ஆணாதிக்க மனோபாவம் காரணமாக, பிற்காலத்தில் அவள் மறுமணம் செய்தால்தான் சொத்துகளை அனுபவிக்க முடியும் என்ற முறையைப் புகுத்தினர். இதனால் பெண்ணின் அழகையும் சொத்துகளையும் முடிந்தவரை அனுபவிக்கலாம் என்ற சூழ்ச்சியுடன் அவர்களது வாழ்க்கையைச் சீரழித்த காரணவன்கள் ஏராளம்.

இதுபோன்ற ஒரு சூழ்ச்சியில் சிக்கிய சரோஜினி என்ற ஜமீன்தாரிணி, 5 கணவர்களை ஒருவர் பின் ஒருவராக சந்தர்ப்பச் சூழலால் திருமணம் செய்கிறாள். பிறகு ஜோடிக்கப்பட்ட விபத்தில் அவள் கொலை செய்யப்படுகிறாள்.  இதன்பிறகு, அவளின் குழந்தைகள் துன்பப்பட்டதை இந்த நாவல் விவரிக்கிறது. சரோஜினியின் இரண்டாவது கணவர் பொன்னன் ஆசாரி அந்தமான் சிறையில் இருந்து திரும்பி வருவது திருப்பத்தை ஏற்படுத்துகிறது. பொன்னன் ஆசாரியும் அவருடைய மகள் விலாஸினியும் மையக் கதாபாத்திரமாக விளங்குகின்றனர். கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்யலாம் என்பது நூல் வலியுறுத்தும் செய்தி. நூலில் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com