மறவர் நாட்டு மண்டேலா (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்)

மறவர் நாட்டு மண்டேலா (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்)

மறவர் நாட்டு மண்டேலா (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்) - டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 216; ரூ. 220; காவ்யா, சென்னை- 24; 044-23726882.

மறவர் நாட்டின் வரலாற்றுச் செய்திகளை ஒரு நாவலுக்கு இணையான விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர். 1987-இல் முதலில் வெளியிடப்பட்டு, முற்றிலும் கிடைக்காதிருந்த நூலை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபதிப்புச் செய்து,  மீண்டும் வரலாற்று  வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றனர்.

வரலாற்று ஆய்வாளரான நூலாசிரியர் எண்ணற்ற சான்றுகளுடனும் ஏராளமான தரவுகளுடனும் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வரலாற்றை எழுதியுள்ளார்.

மறவர்களின் ஏழு கிளைகளில் செம்பி நாட்டு மறவர் கிளையைச் சேர்ந்த ராமநாதபுரம் அரசர்களான சேதுபதிகள். இவர்களின் ஆட்சித் தொடக்கம், முன்னோர்கள் பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் கிடைக்காவிட்டாலும் இவர்களின் மூலத்தையொட்டிய,  பதிவிலுள்ள அனைத்துத் தகவல்களையும் ஆசிரியர் தந்துவிடுகிறார்.

தாயுடனும் தமக்கைகளுடனும் 12 வயதில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் வைக்கப்பட்டு, சூழ்ந்துவந்த நெருக்கடிகளால் அஞ்சிய நவாப்பால் 20 வயதில் விடுதலை செய்யப் பெற்று, பின்னர் 12 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிகிறார் நூலின் நாயகனான ரிபெல் சேதுபதி எனப்படும் முத்துராமலிங்க சேதுபதி. இந்த 12 ஆண்டுகளில் ராமநாதபுரம் மறவர் சீமை பெற்றவையெல்லாம் பெரும் பேறுகள்.

கோயில்கள் பராமரிப்புக்காக இன்றைய தேவஸ்தானத்தின் முன்னோடியான தரும மகமை, யாத்திரை செல்வோருக்காக எண்ணற்ற சத்திரங்கள், அவற்றுக்காக நிலங்கள்,  அரசுத் துறை வணிகம், கைத்தறி ஏற்றுமதி, நாணயச் செலாவணி மாற்றம் மூலம் வருவாய் என அளப்பரிய சாதனைகள்.

சிவகங்கைச் சீமை தோன்றிய வரலாற்றுடன் சேதுபதி மன்னர்களுடனான  மோதல்கள், ஆங்கிலேய  கம்பெனியுடனான மோதல்கள், கம்பெனிப் படையெடுப்பும் போரும், சேதுபதியின் வீழ்ச்சியும் மரணமும் என விரிந்த வரலாற்றைக் கடும் உழைப்பால் பெற்ற தரவுகளுடன் தந்துள்ளார் ஆசிரியர். சேதுபதி மன்னர்கள் பற்றி அறிய உதவும் சிறப்பான நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com