வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்

வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்

வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள் - டாக்டர் அரங்க. இராமலிங்கம்; பக். 240; ரூ.90; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-24342810, 24310769.

'வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்' என்பது  அவர் தனது வாழ்வில் கண்ட மெய்மைகள், கடைப்பிடித்த மெய்மைகள், படைத்த நூல்களில் வெளிப்படுத்திய மெய்மைகள் என ஆய்ந்து நெறிப்படுத்தித் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வ.உ.சி.யை வழக்குரைஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும்  நாம் அறிந்ததைவிட ஆத்மபலம் மிக்க மெய்ஞானியாகவும் அவரை அறிய வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

 'தான் வளர்ச்சி பெற்ற ஒரு விலங்கு என்று மனிதன் எந்த அளவுக்கு அறிகிறானோ, அந்த அளவுக்கு அமைதியை அடைகிறான். அமைதியுள்ள மனிதன் தன்னை  அடக்கியாளக் கற்றுக் கொண்டபடியால் மற்றவர்களோடு இணங்கி நடக்கும் வழியை அறிகிறான்.  தன்னடக்கமே வலிமை. சரியான நினைப்பே ஆண்மை. அமைதியே ஆற்றல். இதுவே உண்மை' என்கிறார் வ.உ.சி. 

சமயம், சமூகவியல், உளவியல்,  கலையியல், மெய்ம்மையியல் என்னும் அணுகுமுறைகளின் வழியே  வ.உ.சி.யின் கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன.

வ.உ.சி. தம் வாழ்நாளின் இறுதியில் உரை எழுதியது சிவஞானபோத சூத்திரங்களுக்காகும். 1934-35-இல் தினமணியில்  இதனை வெளியிட்டுள்ளார். 1935-இல் இதன் முதல்பதிப்பு தூத்துக்குடியில் வெளிவந்துள்ளது.

'இவ்வுரை எழுதுவதற்காகச் சிவஞான போதத்தை நான் ஆராய்ச்சி செய்ததில் எனக்குக் கிடைத்த பலன் சித்தாந்தமும், வேதாந்தமும் ஒன்றே என்ற எனது கொள்கை உறுதியடைந்ததே' என்கிறார் வ.உ.சி.

எதை மனிதன் நினைக்கிறானோ- அதை அவன் அடைகிறான் என்ற மெய்ம்மையை இந்நூலில் நிறுவியிருக்கிறார். இந்நூல்  கற்பார்க்கு மெய்யை மெய்ப்படச் செய்யும் என்பது திண்ணம். இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் மெய்ப்பொருள் அறிவை உணரும்படி படைத்திருப்பது  இந்நூலாசிரியரின் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com