எதிர்காலம்
By DIN | Published On : 23rd January 2023 01:44 PM | Last Updated : 23rd January 2023 01:44 PM | அ+அ அ- |

எதிர்காலம் (சிறு கதைகள்) - துடுப்பதி ரகுநாதன்; பக். 136; ரூ. 130; வசந்தா பிரசுரம், சென்னை - 33; 044-24742227.
அகவை எண்பதைத் தாண்டிய நூலாசிரியர் துடுப்பதி ரகுநாதனின் 23-ஆவது படைப்பு இது. இன்றைய நவ நாகரிக வளரும் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்கும் 11 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
நாம் தினமும் எதிர்கொள்ளும் விஷயங்களை மையக் கருவாகக் கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. 'கண்டிப்பு' என்ற பெயரில் சிறுவயதிலேயே குழந்தைகளை பெற்றோர் மேல் வெறுப்பு வரும்படி வளர்க்கக்கூடாது என்றும், செடிகளுக்கு தண்ணீர் விட்டு, உரம்போட்டு, பூச்சி அணுகாமல் கண்ணும் கருத்துமாகப் பார்ப்பதுபோல்தான் குழந்தை வளர்ப்பு என்றும் வலியுறுத்துகிறது 'எதிர்காலம்' என்ற சிறுகதை.
படிப்பு, அந்தஸ்து, தொழில், பாரம்பரியம் என சமூகத்தில் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்கும் ராகவனின் குடும்பத்தை குடிப்பழக்கம் எப்படிச் சிதைக்கிறது என்பதை விவரிக்கிறது 'குடி குடியைக் கெடுக்கும்'. குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட அவமானம் ராகவனைத் தற்கொலை வரை இட்டுச் சென்று அதிர்ச்சி அளிக்கிறது. 'திடீர் திருப்பங்களும், தமிழ்த் திரை உலகமும்!...' என்ற சிறுகதை சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்தைய திரையுலகின் யதார்த்தத்தை விவரிக்கிறது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுப்பது நாட்டிற்கு செய்யும் சேவை எனவும் அச்சேவையை ஒவ்வொரு குடிமகனும் சிறப்பாகச் செய்தால் அனைவரின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்று எடுத்துரைக்கிறது 'எதிர்காலம்'.