கங்கை நதியும் கங்கா தேவியும்
By DIN | Published On : 23rd January 2023 01:33 PM | Last Updated : 23rd January 2023 01:33 PM | அ+அ அ- |

கங்கை நதியும் கங்கா தேவியும் - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக். 176; ரூ. 190; அன்னம், தஞ்சாவூர்; 75983 06030.
பாரத தேசத்தின் புனித அடையாளங்களில் தலையாயது கங்கை நதி எனலாம். கங்கை இமயமலைத் தொடரில் சிவலிங்க சிகரத்து கோமுக் எனும் இடத்திலிருந்து முகத்துவாரத்துக்கு ஓர் ஆறாகவும், நீலகண்ட சிகரத்திலிருந்து மறு ஆறாகவும் பாகீரதி, அலகநந்தா என்ற பெயர்களுடன் தோற்றம் பெற்று, பின் இணைந்து கங்கைப் பேராறாக பிரவாகித்து நெடுந்தொலைவு ஓடி வங்கதேசத்தில் மீண்டும் பாகீரதியாகவும் பிரிந்து வங்கக் கடலில் சங்கமமாகிறது.
இந்த நதியின் தோற்றம் முதல் சங்கமம் வரையிலான பயணத்தையும், வடமொழி இதிகாசங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டுள்ளது என்பதையும், தமிழகத்தில் உள்ள 'சிவகங்கை', 'சோழகங்கம்' போன்றவை கங்கையோடு எவ்வாறு தொடர்புடையன என்பதையும், கங்காதேவிக்கு கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ள ஊர்கள் குறித்தும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
கங்கைக் கரையில் உள்ள 'பஞ்ச பிரயாக்' எனப்படும், விஷ்ணு பிரயாக், நந்த பிரயாக், கர்ண பிரயாக், ருத்ர பிரயாக், தேவ பிரயாக் ஆகிய ஐந்து கூடுதுறைகள் குறித்த செய்திகளையும், அலாகாபாத் நகரில் மூன்று நதிகள் இணையும் 'திரிவேணி சங்கமம்' குறித்த செய்திகளையும், ராமாயணத்தின் பாலகாண்டத்தில் ராமனுக்கு கங்கையின் வரலாற்றை கௌசிகர் பதினொரு சருக்கங்களில் கூறியிருப்பதையும், தமிழில் கம்பராமாயணத்தில் கங்கை விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்ததைக் கம்பர் முப்பது பாடல்களில் விளக்கியிருப்பதையும் ஆசிரியர் அழகாகத் தொகுத்துத் தந்திருப்பது சிறப்பு.
நூலைப் படித்து முடிக்கும்போது, கங்கை நதியுடனே 1,500-க்கும் மேற்பட்ட மைல்கள் பயணித்த நிறைவு ஏற்படுகிறது.