திருவள்ளுவச் சமூகவியல்
By DIN | Published On : 23rd January 2023 01:42 PM | Last Updated : 23rd January 2023 01:42 PM | அ+அ அ- |

திருவள்ளுவச் சமூகவியல் - க.ப.அறவாணன்; பக்.416; ரூ.400; தமிழ்க் கோட்டம், சென்னை-29; 044-23744568.
பைபிளுக்கு அடுத்த படியாக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் இன்று வரை பலர் உரை எழுதியுள்ளனர். அந்த நூலை மையப்படுத்தி, இன்றும் பலர் நூல்களை எழுதிவருகின்றனர். இவற்றுள் இந்த நூல் பல்வேறு வகைகளில் வித்தியாசப்படுகிறது.
திருக்குறளை தேசிய நூலாக்குவது, திருவள்ளுவம் அரசியல் சாசனம் ஆக வேண்டும் என்பதன் அவசியத்தை காரண காரியங்களுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.
திருக்குறளில் காதல், அரசியல் சாசனம், கோட்பாடுகள், மார்க்சியம், கன்ஃபூசியம், அற இலக்கியம், பொருளாதாரச் சிந்தனை, புதுமைகள், தமிழரைக் கட்டிப்போட்ட கர்ம வினைக் கொள்கை என்று பல வகைகளில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார்.
திருக்குறளை மக்களுக்குக் கொண்டு சென்ற காலிங்கர், பரிமேலழகர், வீரமாமுனிவர் போன்றோர் தெரிவித்த கருத்துகளும் நூலில் சிறப்புற இடம்பெற்றுள்ளன.
இவைதவிர, திருக்குறள் கல்வெட்டுகள் ஆக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நூலாசிரியர் வலியுறுத்துகிறார். திருவள்ளுவரின் அரசியல் கோட்பாடுகளைப் படிக்கும்போது, பிற்கால அரசியலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த அவரது தெளிவான சிந்தனை வியக்க வைக்கிறது.
பிற்சேர்க்கையில் நூலாசிரியர் பங்கேற்ற திருவள்ளுவ நிகழ்வுகள், கருத்தரங்குகள், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, திருக்குறள் தொடர்பான நூல்கள் குறித்த கட்டுரைகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன.