கண்டேன் கண்டறியாதன கண்டேன்

கண்டேன் கண்டறியாதன கண்டேன்

கண்டேன் கண்டறியாதன கண்டேன் - வி. சுந்தரம்;  பக்.  276; ரூ. 250;   தி ரைட் பப்ளிஷிங், சென்னை - 17; 044-  2433 2682 .

ஒரு காலத்தில் தமிழகத்தில், குறிப்பாகத் திரையுலகில் 'கவிஞர்' என்றால் அது கண்ணதாசனையே குறிக்கும். எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர், தீவிர நாத்திகவாதி, அதிதீவிர ஆத்திகவாதி, தேசியவாதி எனப் பன்முகம் அவருக்கு இருந்தாலும் 'கவிஞர்' என்றே அவர் அறியப்பட்டார்.

கண்ணதாசனின் இலக்கியப் புலமை, திரைப்பட வசனங்களில் அவரின் தனித்தன்மை, அரசியலில் அவரின் பங்களிப்பு, நடிகராகி அரிதாரம் பூசியது, நாத்திகத்திலிருந்து ஆத்திகத்துக்கு மாறி 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூல் எழுதியது, வாழ்க்கை குறித்த அவரின் தத்துவப் பார்வை இப்படி கண்ணதாசன் குறித்த பல்வேறு செய்திகளைப் பின்னணியுடன் சுவையாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

கண்ணதாசன் குறித்து ஏற்கெனவே பல நூல்கள் வெளிவந்திருந்தாலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள பல செய்திகள் பலரும் அறியாதவையே. குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் எழுதிய முதல் பாடலிலேயே (படம்: 'மர்மயோகி') 'பொன்னாகும் காலம் வீணாகலாமோ? துணையோடு உலகாளவா...' என்று எழுதியிருப்பதும், 'இல்லற ஜோதி' படத்தில் கண்ணதாசன் எழுதிய 'அனார்கலி' ஓரங்க நாடக வசனங்கள் வேறொருவர் பெயரில் வெளிவந்ததும், 1957-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் எம்.ஜி.ஆர். காளையை அடக்கும் படத்தை சுவரொட்டியாக ஒட்டி திமுக பிரசாரம் செய்ததும் (காங்கிரஸ் கட்சியின் சின்னம் இரட்டைக் காளை) சுவையான செய்திகளாகும்.

'இல்லற ஜோதி', 'மதுரை வீரன்', 'மன்னாதி மன்னன்' போன்ற படங்களில் இடம்பெற்ற கண்ணதாசன் வசனங்களின் சிறு பகுதியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. கண்ணதாசன் பாடல்களில் கம்பர், சேக்கிழார், வள்ளுவர், பட்டினத்தார் ஆகியோரின் தாக்கம் காணப்படுவதையும் நூலாசிரியர் விவரித்துள்ளது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com