நேசித்து வாசித்தது... எழுத்தாளர் அரிமளம் சு.பத்மநாபன்

எனது 18-ஆவது வயதுக்குள் கல்கியின் "பொன்னியின் செல்வன்', "அலை ஓசை' ஆகிய நாவல்களைப் பல முறை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
நேசித்து வாசித்தது... எழுத்தாளர் அரிமளம் சு.பத்மநாபன்

எனது 18-ஆவது வயதுக்குள் கல்கியின் "பொன்னியின் செல்வன்', "அலை ஓசை' ஆகிய நாவல்களைப் பல முறை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தமிழ் எழுத்து நடை சிறப்பாக வர வேண்டும் எனில் கல்கியின் நாவல்களைப் படிக்க வேண்டும் என தமிழாசிரியர்களும் வகுப்புத் தோழர்களும் கூறக் கேட்டுள்ளேன். அதற்காகவே கல்கியின் நாவல்களை படிக்கத் தொடங்கினேன். அவரின் வர்ணனைகள் என்னை அதிகம் நேசிக்க வைத்தன. அதனால் திரும்பத் திரும்ப படித்தேன். 
கல்கியின் "அலை ஓசை' சுதந்திரப் போராட்டப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. கல்கி உள்ளிட்டோரின் வரலாற்று நாவல்களை அதிகம் படித்ததால் தற்போது தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை என்னால் எளிதாக எழுத முடிகிறது. உலக அளவிலான பிரபல எழுத்தாளர்களுடன் தமிழ் எழுத்தாளர்களை ஒப்பிட முடிகிறது. 
பிரிட்டிஷ் எழுத்தாளர் இ.எம்.ஃபாஸ்டர் எழுதிய "எ பேúஸஜ் டு இந்தியா' நாவலை மிகவும் ஆச்சரியத்துடனும் நேசித்தும் படித்துள்ளேன். 1930-களில் எழுதப்பட்ட அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் இந்திய சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதாக இருக்கும். அதில் இந்தியா சுதந்திரம் அடையும்போது பல நாடுகளாக பிரிந்திருக்கும் என்ற கருத்தும் இடம் பெற்றிருக்கும். அப்போதைய ஆங்கில அரசு அந்த நாவலுக்குத் தடை விதித்திருந்தது. 
தமிழ் நாவலில் எனக்கு மிகவும் பிடித்ததாக கொத்தமங்கலம் சுப்பு தனது புனைபெயரான கலைமணி எனும் பெயரில் எழுதிய "தில்லானா மோகனாம்பாள்' உள்ளது. 
நாவலாசிரியர் இசைப் பின்னணி கொண்டவர் என்பதால் தமிழின் பாரம்பரிய தமிழ் இசைக் கருவியான நாகஸ்வரம், பரதநாட்டியம் ஆகியவற்றை மிக நுட்பமாக விளக்கியிருப்பார். தமிழில் நகைச்சுவை மிக்க நாவலாகவும் தில்லானா மோகனாம்பாள் உள்ளது. அந்த நாவலை கருத்துச் சிதையாமல் ஏ.பி.நாகராஜன் திரைப்படமாக்கினார்.
நாவலாக வெற்றியடைந்த "தில்லானா மோகனாம்பாள்' திரைப்படமாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
தமிழறிஞர் உ.வே.சாமிநாதையரின் "என் சரித்திரம்' சுயசரிதை நூல் நான் மிகவும் நேசிப்பதாகும். பொதுவாக சுயசரிதம் எழுதுவோர் தம்மை முன்னிறுத்தியே எழுதுவர். 
ஆனால், உ.வே.சா. எழுதியுள்ள சுயசரிதமோ, தமிழகத்தின் இலக்கியம், மொழி, சமூகம், நாகரிகம் என பல துறைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியப் பாதுகாப்பில் ஆன்மிக மடங்களின் பங்களிப்பையும் அதில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com