என் சரித்திரம்

என் சரித்திரம்

என் சரித்திரம் - தமிழ்த் தாத்தா உ.வே.சா., பக். - 704; ரூ. 290; நற்றிணை பதிப்பகம், ஆழ்வார்திருநகர், சென்னை - 600 087;  ✆ 044 - 42732141.

தமிழ் மொழியின் வரலாற்றை, தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைப் படிக்கத் தொடங்குமுன் படிக்க வேண்டிய நூல், தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையரின் 'என் சரித்திரம்'.

உ.வே.சா.வின் சரித்திரம் என்றே அறியப்பட்டாலும் இது தமிழின் சரித்திரமும்கூட. சீவக சிந்தாமணியைப் பாடம் சொல்லப் போனவர்தான் படித்துக் களித்து, அதைப் பதிப்பிக்கும்  நிலைக்கு வருகிறார். தமிழின் மீதான அந்த ரசனையும் உந்துதலும் ஆர்வமும்தான் அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருக்கிறது.

எங்கள் ஊர் என்று தன் சரித்திரத்தைத் தொடங்கும் உ.வே.சா., கண் முன் காண்பதைப் போல உத்தமதானபுரத்தின் வரலாற்றைச் சமூக - பொருளியல் பின்னணியுடன் அறிமுகப்படுத்துகிறார்.

பாடம் கேட்கத் தந்தையுடன் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைச் சந்திக்கும் பகுதியில் ஐயரின் நடை, ஒரு திரைப்படம்  பார்ப்பதைப் போலவே இருக்கிறது. எத்தனையோ நூல்களைத் தமிழுக்கு மீட்டுத் தந்த உ.வே.சா., வெறும் 32 பக்கங்களில், தான் பதிப்பித்த முதல் நூலைப் பற்றிக் கூறும்போது பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்; ஒரு பாடலில் அவரும் பாராட்டப்பட்டிருந்ததால் பார்க்கும்போதெல்லாம் ஆனந்தம் பொங்கியது என்கிறார்.

சிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை போன்ற நூல்களைப் பதிப்பிக்கும் பணிகளில் அவர் சந்தித்த இடர்களை, அலைச்சல்களை, அனுபவங்களைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் உ.வே.சா.

உ.வே.சா.வின் சரித்திரம் மட்டும் அல்ல, அன்றைய காலகட்டம் பற்றிய சித்திரிப்புகள் உள்பட நூல் முழுவதும் ஏராளமான தகவல்கள் குவிந்திருக்கின்றன. நூலின்வழி இன்றைய பதிப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஏராளம். தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, படித்திருக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com