தகவல் அறியும் உரிமை

தகவல் அறியும் உரிமை

தகவல் அறியும் உரிமை - ஓர் எழுச்சியின் கதை - அருணா ராய் (தமிழில் அக்களூர் இரவி); பக்.559; ரூ.720; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629001; ✆ 91-4652-278525.

நாட்டில் சுதந்திரத்துக்கு பின் மக்களாட்சி முறை அமைந்த நிலையில் அரசின் சட்டத் திட்டங்கள் அனைவருக்குமானதாக உருவாக்கப்பட்டது. அதில் விலைமதிப்பற்றது ஒரு குடிமகன், ஒரு வாக்கு என்பது. ஆனால், அரசின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக நடக்கும் போதுதான் அங்கு உண்மையான மக்களாட்சி அமையும்.

பல சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், பெரும்பாலான சட்டங்களின் பயன்கள் கடைகோடி மனிதருக்கு சென்றடைவதில்லை. அந்த வகையில், ஒருமித்த குரலும், ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை ராஜஸ்தானில் நிகழ்த்திக் காட்டியவர் அருணா ராய். ராஜஸ்தானின் தேவ்துங்ரி கிராமத்தில் சட்டப்படியான உரிமைகளை நியாயமான முறையில் கோருவதற்காக எழுந்த போராட்டம் குறித்து பேசுகிறது இந்நூல். தமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் அந்த கிராம மக்கள் நியாயம் கிடைக்க அரசின் பதிவேடுகள் அவசியம் என உணர்கின்றனர். எளிய மக்களிடம் தோன்றிய இந்த சிறுபொறி இந்திய அளவில் பெருந்தீயாய் பரவி பெரும் போராட்டமாக மாறுகிறது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அருணா ராயும், மஸ்தூர் கிஸôன் சக்தி சங்கதனும் அடிப்படை தகவல்களை சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு சட்டம் வேண்டும் என்பதை முன்வைக்கின்றனர். நீதியும், சமத்துவமும் கொண்ட சட்டப் புத்தகங்களின் உத்தரவாதங்களை விவேகத்துடன் பயன்படுத்தினால், ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றின் எல்லைக்குள் சில யுத்தங்களை வெல்ல முடியும் எனும் நம்பிக்கையை இந்தக் கதை அளிக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com