இதை நான் கூறியாக வேண்டும்

இதை நான் கூறியாக வேண்டும்

இதை நான் கூறியாக வேண்டும் - நீதியரசர் மிருதுளா பட்கர் (தமிழில் - நீதிபதி தி.து. சக்கரவர்த்தி, நீதியரசர் பி.என். பிரகாஷ்); பக். 140; ரூ. 200; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை - 4; ✆9289281314.

நீதித் துறை தொடர்பான சில நடத்தைப் போக்குகளை சாதாரண மக்களுக்கும் விளங்கவைக்கக் கூடிய இந்த நூல், கடினமான ஒரு போராட்டத்தை மேற்கொள்ள நேரிட்ட நேர்மையான ஒரு நீதிபதியின் அனுபவங்களின் பதிவு.

பெண் நீதிபதியொருவரின் கணவர் பிரபலமான நடிகர். பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கொன்றில் அவர் சிக்க வைக்கப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள நேரிடுகிறது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரான நீதியரசர் மிருதுளா பட்கர், ஆறாண்டுகளுக்கும் மேலாகத் தாம் எதிர்கொண்ட அவதிகளை நூலில் விவரிக்கிறார்.

187 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்த பலரில் உரிய ஆதாரமில்லாத ஒருவரை உடனடியாக விடுவித்ததிலிருந்துதான் இவர் மீதான அரசு, காவல் துறையின் கோபம் தொடங்குகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறுதியான முடிவின்றியும் தெளிவான விசாரணையின்றியும் ஆண்டுக்கணக்கில் வாழ்வை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

அவமானம் காரணமாகக் கணவருடன் தற்கொலை செய்துகொள்ளும் தன் முடிவை ஒரு தொலைபேசி அழைப்பு எவ்வாறு மாற்றியது என்று விளக்கும் அவர், தொடர்ச்சியான தனது போராட்டத்தையும் சமரசமின்மையையும் விவரிக்கிறார். உண்மையைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் தனிநபரையும் குடும்பத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அச்சு, காட்சி ஊடகங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணையைச் சாடுகிறார் மிருதுளா. நீதியும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்கள்? அரசு, அரசியல்வாதிகள், காவல்துறை, சமூக விரோத சக்திகள் எவ்வாறு ஒன்று திரள்கின்றன என்பதை வெளிப்படையாகப் பேசுகிறார் மிருதுளா பட்கர்.

வழக்குரைஞர்களும், சட்ட மாணவர்களும், நீதித்துறை அலுவலர்களாக நினைப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டிய மிகவும் காத்திரமான நூல். நல்ல மொழிபெயர்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com