சாதியின் பெயரால் - இளங்கோவன் ராஜசேகரன் (தமிழில் மருதன், நிவேதிதா லூயிஸ்; பக். 244; ரூ.260; கிழக்கு பதிப்பகம்; சென்னை-14. ✆044-42009603.
ஜாதி மறுப்பையும், சமூக நீதியையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது ஒரு வேதனை முரண். ஜாதியின் பெருமையைக் காக்க பெற்ற மகளின் வாழ்வை அழிக்கவும், பெற்ற மகளைக் கொலை செய்யவும் சிலர் தயங்குவதில்லை.
இந்த ஆணவக் கொலை சம்பவங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஜாதி அடுக்கில் கீழ்நிலையில் இருப்பவர்கள்தான். அந்த வகையில்,
உடுமலைப்பேட்டை கௌசல்யா-சங்கர், தருமபுரி திவ்யா-இளவரசன், கடலூர் முருகேசன்- கண்ணகி, திருச்செங்கோடு சுவாதி- கோகுல்ராஜ் உள்ளிட்டோரின் காதல் விவகாரங்களில் நடந்த ஆணவக் கொலைகள் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து, இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள சதிகளை அம்பலப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
இந்த சம்பவங்களில் இளவரசன் மட்டும் தற்கொலை செய்துகொண்டார் என உறுதி செய்யப்பட, மற்றவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஆணவக் கொலைகளுக்குப் பின்னால் வெறும் ஜாதிப் பெருமை மட்டும்தான் இருப்பதாக நினைத்தால் அது தவறு; பொருளாதாரமும் இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணி என பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் நூலாசிரியர்.
வாக்கு அரசியலைக் கருதி, ஆணவக் கொலைகளுக்கு எதிராக மௌனம் காக்கும் அரசியல் கட்சிகளையும், ஜாதிப் பெருமைக்குத் துணைபோவதாக நினைத்துக் கொண்டு கடமை தவறும் காவல் துறையையும் கண்டிக்கத் தயங்கவில்லை. நூலாசிரியரின் பெரும் களப் பணியின் விளைவாக எழுதப்பட்ட இந்நூலின் கட்டுரைகள் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்புவதாக உள்ளன.