நம்ம குலசாமிகள்
நம்ம குலசாமிகள் - பேரா. சு.சண்முகசுந்தரம், பேரா. சுதாகர் சிவசுப்பிரமணியம்; பக். 778; ரூ.850; காவ்யா, சென்னை-24; ✆ 044-23726882.
'காவ்யா' சண்முகசுந்தரத்தின் 75-ஆவது வயதையொட்டி, தமிழர்களின் வேர்களை அறியும் நோக்கில் ஒருநாள் கருத்தரங்காக, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 77 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். குலதெய்வத்தை விளக்கும் கட்டுரைகள் பத்தும், அம்மன்களை விளக்கும் கட்டுரைகள் முப்பத்தாறும், சாமிகளை விளக்கும் கட்டுரைகள் பதினைந்தும், அய்யனார், சாஸ்தாக்களை விளக்கும் கட்டுரைகள் பதினாறும் உள்ளன.
கட்டுரைகளை எழுதியதில் தில்லி முதல் குமரி வரையுள்ள பேராசிரியர்கள் பங்குபெற்றுள்ளனர் என கூறும் நூலாசிரியர், 'ஆயிரம் குலங்கள் ஆயிரம் தெய்வங்கள்தான் உண்டு; ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்பது இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.
பெருந்தெய்வங்கள், விருப்பத் தெய்வங்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், குலதெய்வங்கள், தெய்வங்களுக்குள்ள வழிபாட்டு முறைகள், கிடாவெட்டு, காணிக்கை குறித்த விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
'சாதி' இல்லை என்பது சரியல்ல; குலதெய்வங்களை வைத்து இவர்கள் இன்னாருடைய பரம்பரை என்று கூறலாம் என்று பேரா. செல்வி சிவபார்வதி தனது 'குலதெய்வம்' கட்டுரையில் கூறுகிறார்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு போலவே, உயர்ந்தவர்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு உண்டு. சிறுமரபுத் தெய்வம் என்பது நாட்டுப்புறத் தெய்வமாக உள்ளது. நாட்டுப்புறத் தெய்வங்கள்
நம்மிடையே வாழ்த்து மறைந்தவர்களாக உள்ளனர் - என்கிறார் வீ.லட்சுமி ஜெயந்தி. குலங்கள் மூலமாக வந்துள்ள வழிபாட்டுத் தெய்வங்களை விவரிக்கிற நல்ல தொகுப்பு இது.