ரயில் எஞ்சினும் நானும் - என்.எஸ்.ரோஸ்; பக். 250; ரூ. 300; பிரதீபா பப்ளிஷர்ஸ், கோயம்புத்தூர்- 641109; ✆ 95855 39988.
ஒரு அழகிய வாழ்வியல் நடைமுறையின் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அருமையான நாவல் இது. படைப்பாளர் என்.எஸ். ரோஸ் உருவாக்கிய இந்த நாவல் அவரது முதல் முயற்சி போல தெரியவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நடைமுறை எதார்த்தங்கள்தான் இழையோடுகின்றன.
ஒரு ரயில் எஞ்சினுக்கு நடுவே தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டமும், கள்ளம் கபடம், சூதுவாது இல்லாத கிராமத்து மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கும்
என்பதை இந்த நாவல் விளக்குகிறது. அதுமட்டுமல்ல; விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை பசுமரத்து ஆணி போல் பதியவைக்கிறது இந்த கதை. ரயில் எஞ்சின் தொடங்கி, கடைசி பெட்டி வரை பெட்டிகளாக அத்தியாயங்களை கொடுத்திருப்பது ரசிக்கும் முயற்சி.
ஒருவரின் உழைப்பின் அளவை அந்தக் காலத்தில் அவர்கள் அணியும் அரைஞாண் கயிற்றை வைத்து கணிப்பார்கள் என்பதும் சிறு காயங்களுக்கு பூண்டு தேய்த்தால் காயம் ஆறும் என்பதும் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளவை. இதுபோன்று கிராமத்து ஒப்பாரி பாடல் ரீங்காரமிடுகிறது. கிராமத்து பழமொழிகள், வெகுளியான பேச்சுகள் என கிராமத்து வாழ்க்கையை கண்முன் நிறுத்துகின்றன.
மண்வாசனையை ரசிக்க விரும்பும் அத்தனை பேரும் ரயில் எஞ்சினில் பயணிக்கலாம்; இல்லை படிக்கலாம். நாவல் பிரியர்களுக்கு நல்லதொரு அனுபவம் இது.