கிராமிய மேம்பாட்டுக்கான புரிதலை உருவாக்குவோம் - க.பழனித்துரை; பக். 88; ரூ.120; புரட்சி பாரதி பதிப்பகம், ஆவடி- 600055; ✆9043050666.
அதிகாரப் பகிர்தலே அத்தியாவசியத் தேவை, உள்ளாட்சியில் தன்னாட்சி, உள்ளாட்சியை வலுப்படுத்துவோம், பஞ்சாயத்தும் மக்கள் நல அரசாகலாம், தற்சார்பு கிராமங்களை உருவாக்க.., கிராமமே பொருளாதார வளர்ச்சி மையம், நீர் அறிவைப் பெருக்குவோம் என்பன உள்ளிட்ட 15 கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
'கிராம சபை என்பது மக்களவைக்கு சமமானது' என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது. இன்று வடை, தேநீர் கொடுத்து கையொப்பம் வாங்கும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது என்பது அறியாமையின் உச்சம் என்று அங்கலாய்ப்பையும் ஆவேசத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர்.
கிராமங்களில் வேலைவாய்ப்பு இல்லாததால், மக்கள் நகரங்களை நோக்கிப் புலம் பெயர்கின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கை மேம்பட கல்வி, ஆராய்ச்சிப் பணிகளை சமூகம் சார்ந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு 'உன்னத் பாரத் அபியான் 2.0' திட்டம் மிகப் பெரிய இயக்கமாகச் செயல்பட கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள், உயர்கல்வி நிறுவனங்கள் சமூகப் பணியை தங்கள் பாடத் திட்டத்தில் இணைந்து செயல்படும்படி பணிக்கப்பட வேண்டும்' என்பதே நூலாசிரியரின் கருத்து.
'அதிகாரப் பரவல் என்பது குடும்பத்தில் தொடங்கி அரசியல், சமூக, பொருளாதார, நிர்வாக அமைப்புகள், நிறுவனங்கள் என அனைத்திலும் நடைபெற வேண்டிய செயல். அப்படிப் பார்க்கத் தொடங்கும்போது மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த மாட்டோம்' என்பது நூலாசிரியரின் திடமான நம்பிக்கை.
பயனுள்ள சிந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்த நூல் அளிக்கும்.