தென்னிந்தியத் திருமணச் சடங்குகள் - எட்கர் தர்ஸ்டன் (தமிழில் - வானதி): பக். 128; ரூ. 160; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆8148066645.
'தென்னிந்திய குலங்களும் குடிகளும்' எழுதிய எட்கர் தர்ஸ்டனின் 'தென்னிந்திய இன வரைவியல் குறிப்புகள்' என்ற பெருந்திரட்டிலிருந்து திருமணங்கள் தொடர்பான ஒரு சிறு பகுதியே இந்த நூலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தொடக்கத்தில் ஒரு பிராமண வீட்டு ஐந்து நாள் திருமணம் பற்றி விளக்கி (இந்த விவரிப்பிலேயே அறியாப் பருவத் திருமணங்கள்தான்) தொடர்ந்து ராஜுக்களிலிருந்து கோண்டு பழங்குடிகள் வரை பல்வேறு சாதியினருடைய திருமணங்களின் முக்கியமான சடங்குகளை விளக்குகிறார் தர்ஸ்டன்.
அரசு அறிக்கைகளிலும் நூல்களிலும் பத்திரிகைகளிலும் வேறு பதிப்புகளிலும் புதைந்துகிடந்த, பல்வேறு பகுதிகளில் அலைந்து மாவட்ட அதிகாரிகள், தனிநபர்களிடம் எழுதிக் கேட்டு சேகரித்த ஏராளமான விஷயங்களை நூலில் திரட்டித் தந்திருக்கிறார்.
விசாகப்பட்டினத்திலுள்ள 'கடப' என்ற சாதியில் திருமணத்துக்கு முன் மணமகன் அவருடைய மாமனாரிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டியிருந்ததையும், பின்னர் அதற்கு ஈடாகப் பணம் தரப்பட்டதையும் தெலுங்கு ராஜுக்கள், வெலமா சாதிகளில் மணமகனுக்குப் பதிலாக வாளை அனுப்புவதையும், நெல்லை மறவர்கள் ஒரு கம்பை அனுப்பிவைத்துத் தாலி கட்டுவதையும் பதிவு செய்துள்ளார் தர்ஸ்டன்.
கிழக்குக் கடற்கரையில் இருக்கும் மரைக்காயர்கள் பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகின்றனர் என்பது போன்ற எண்ணற்ற தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. அத்தை மகள், மாமன் மகளை மணப்பது தொடர்பான வினோதமான வழக்கங்களுடன் தர்ஸ்டன் தெரிவித்துள்ள எத்தனையோ சடங்குகள் இப்போது இல்லை. அல்லது உருமாறி வெவ்வேறு வடிவெடுத்து விட்டிருக்கின்றன. வியக்க வைக்கும் தகவல்கள் நிறைந்த கருவூலம் இந்த நூல்.