சிறகிருந்த காலம் - பா.சேதுமாதவன்; பக்.172; ரூ.120; உலா பதிப்பகம், திருச்சி- 620 005; ✆94438 15933.
ரயில்வே துறையில் பணிபுரியும் நூலாசிரியர், கரோனா காலத்தில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது எழுதி அனுப்பியவற்றை 60 கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்கியுள்ளார். அவர் தனது வாழ்க்கைப் பயணத்தில் கடந்த கால அனுபவம், சந்தித்தோரில் மறக்க முடியாதவர்கள், நேரிட்ட துன்பங்கள், பணிக்கால அனுபவங்கள் போன்றவற்றை தன் மனதில் இருந்து, வெளியே எடுத்து எழுத்து வடிவம் அளித்துள்ளார்.
சுய வரலாறு போன்று இல்லாமல், பல்வேறு இடங்களைப் பற்றிய குறிப்புகள், நட்பு, வாழ்க்கை, உழைப்பு, மருத்துவம், பாரம்பரிய விளையாட்டுகள், இலக்கியம் என்று பல்வேறு தகவல்களை அளிக்கும் வகையில், தனது அனுபவம் வாயிலாக எழுதியுள்ள நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த நூலைப் படிக்கப் படிக்க, நம் வாழ்க்கையில் நிகழ்ந்த அதுபோன்ற சம்பவங்களும் நம் கண் முன் நிழலாடுகின்றன.
சந்தித்த சவால்களையும் சோதனைகளையும் தகவல்களையும் அள்ளித் தந்த நூலாசிரியர், 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே, சேமிப்பில்லாத குடும்பம் வறுமையிலே' என்பதே கரோனா நமக்கு கற்று தந்த பாடம் என்று நூலை நிறைவு செய்கிறார்.
'நலம் தரும் போதை' என்ற கட்டுரையில், தனது கல்லூரிப் பருவத்தில் போதைக்கு அடிமையான நண்பர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, இன்றைய இளைஞர்களிடையே போதைப்
பழக்கம் பெருகிவருவதைத் தடுக்க ஒரே வழி யோகாவும், தியானமும் என குறிப்பிடும் நூலாசிரியர், போதைக்கு மாற்றாக இவற்றை பின்பற்ற வேண்டும் என்கிறார். இளைய தலைமுறையினருக்கு வாழ்வியல் வழிகாட்டி நூல் இது.