அடால்ஃப் ஹிட்லர் - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 192; ரூ.230; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; ✆8148066645.
பெயரைக் கேட்டாலே வெறுப்பு பரவும் கொடுங்கோலனாகத் திகழ்ந்த ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் பதிவு செய்துள்ளது. 'தான் பிறந்த ஆரிய இனமே உயர்வானது' என்ற எண்ணத்தோடு யூதர்களைக் கொன்று குவித்தார். ஜனநாயக முறையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சர்வாதிகாரம் மூலம் தான் நினைத்தபடி அரசாள முடியும் என்று தவறாக புரிந்துகொண்டார்.
தனது பேச்சாற்றல், மக்களைக் கவரும் கெட்டிக்காரத்தனத்தை தவறாகப் பயன்படுத்தி, இடித்துரைப்பார் யாருமின்றி கொடுஞ்செயல்கள் புரிந்தார். ஆனாலும் ஹிட்லரின் முன்னேற்றம் தடைபடாமல் இருந்தது. ரஷியா மீதான ஜெர்மனியின் படையெடுப்பே ஹிட்லரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
ஹிட்லரின் வறுமையான இளமைக்காலம், அரசியல் எழுச்சி, அன்றைய அரசியல் நிலை, இரண்டாம் உலகப்போர் அரசியல், ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டது வரையிலான நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
நெப்போலியனுடன் ஹிட்லரை ஒப்பிட்டதோடு மட்டுமல்லாது, நெப்போலியனிடமிருந்து ஹிட்லர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் இந்நூல் குறிப்பிடுகிறது.
உலகில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்த 19-20 ஆம் நூற்றாண்டுகளில் மன்னராட்சியில் இருந்த அதே அதிகாரம் மக்களாட்சியிலும் இருந்தன. மக்களாட்சியில் வெறுக்கத்தக்க சர்வாதிகாரியாக இருந்தார் ஹிட்லர்.
ஹிட்லர் பதவிக்கு வந்த பிறகு மக்களுக்கு நன்மைகள் மட்டும் செய்திருந்தால் வரலாற்று நாயகனாக போற்றப்பட்டிருப்பார். ஆனால், தனது பிடிவாதகுணத்தால் எதிர்மறை நாயகனாக வரலாற்றில் இடம்பிடித்து, ஜெர்மனியின் இருண்ட காலத்துக்கு காரணகர்த்தாவாகவும் விளங்கினார் ஹிட்லர் என்பதை இந்நூல் நிறுவுகிறது.