கல்வெட்டுகளில் மறவர் வரலாறு - நெ.துரை அரசன்: பக். 520; ரூ. 550; காவ்யா, சென்னை - 24; ✆044-23726882.
கள்ளர், மறவர், அகமுடையர் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய விவரங்களை விரிவாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
பல்லவர் காலக் கல்வெட்டுகளில் தேனி மாவட்டம் புலிமான் கோம்பைக் கல்வெட்டைக் கொண்டு, வைகை அணையையொட்டி கூடலூர் பகுதியில் ஆநிரை கவரும் கள்வர், மறவர் குலத்தோர் நெடுங்காலம் வாழ்ந்ததைச் சுட்டுகிறார். திருவெள்ளறைக் கல்வெட்டிலுள்ள சாத்தன் மறவனையும் குறிப்பிடுகிறார்.
சோழர் காலக் கல்வெட்டுகளில் 10- ஆம் நூற்றாண்டுப் பழுவேட்டரையர் கல்வெட்டு ஒன்றில் 'வெள்ளாளர், கைக்கோளருடன் மறவர்' என்பதும் சாதியாகவே குறிக்கப்படுகிறது.
மகாபலியைச் சேர அரசர் , அவரை அசுரனாகச் சித்திரித்தல் கட்டுக்கதை எனக் குறிப்பிட்டு, சான்றாக ஜம்பை சிவன் கோயில் கல்வெட்டை எடுத்துக் காட்டுகிறார்.
மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் பற்றிக் கூறும்போது, '1752 -ஆம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்குக் கிடையாது, சுவாமிக்கு சொக்கநாதர் என்ற பெயரும் 1710 -ஆம் ஆண்டில்தான் சூட்டப்பட்டிருக்கிறது. மாடக்குளக் கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில், திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்பனவே இறைவன், இறைவியின் பெயர்கள்' என்று மேற்கோள் காட்டுகிறார்.
புதுக்கோட்டைக் கல்வெட்டுகளில் மறவன் மதுரை என்ற ஊரையும் சூரைக்குடி மறவர்கள் பற்றியும் குறிப்பிடும் ஆசிரியர், சேதுபதி மன்னர்கள் தொடர்பாகவும் பிற்காலப் பாளையப்பட்டு கல்வெட்டுகளிலிருந்து தென் மாவட்ட மறவர் ஜமீன்கள் பற்றியும் அறிமுகப்படுத்துகிறார்.
ஆங்கிலேயர் காலந்தொட்டுத் தற்காலம் வரையிலான கல்வெட்டுகளைத் தொகுத்துள்ளதாகக் கூறும் ஆசிரியர், கால வரிசை பற்றி அறுதியிடவில்லை. மறவர்கள் தொடர்பான கல்வெட்டுத் தகவல்கள் பற்றிய குறிப்பிடத்தக்க தொகுப்பு.