காலத்தின் மடியில் - மாசிலாமணி நந்தன்; பக்.196; ரூ.150; கலைஞன் பதிப்பகம், சென்னை-17; ✆044 2834 0488.
கரோனா காலத்தில் முகநூலில் எழுதப்பட்டு, பின்னர் நூல்களாக உருவானவை நூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கும். அந்நூல்கள் நறுக்குகளாக, கவிதை நூல்களாக, நாவலாக, அனுபவக் கட்டுரைகளாக வெளிவந்து பேசப்பட்டு எழுத்தாளர்களில் கவனிப்புக்கு உள்ளானவர் பலர்.
இந்த நூலாசிரியரும் முகநூலில் எழுதி, எழுதி குவித்ததை நூலாக்கியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்தாலே அலுப்பே தட்டாது என்று சொல்வார்கள். அவ்வளவு அனுபவம். தந்தை மாசிலாமணியைத் தொடர்ந்து 'கலைஞன் பதிப்பகம்' நடத்துவதாலோ, என்னவோ மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் எல்லாம் அறிமுகம். அனுபவங்களில் சொல்லக்கூடியதைவிட சொல்லக் கூடாதவையும் நிறைய உண்டு. இந்நூலிலோ நூலாசிரியர் சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்லியிருக்கிறார்.
ஜனநாயகம், சமூகம், அரசியல், பண்பாடு, இலக்கியம், பெண்ணுரிமை, இடஒதுக்கீடு, பொருளாதாரம், ஆன்மிகம், கல்வி, வேலைவாய்ப்பு, மொழிகள், அன்றாட வாழ்வியல் நடைமுறைகள், குடும்பம், உறவினர்கள், அரசியல் தலைவர்கள் என்று சகல விஷயங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. பத்து வரிகள் முதல் ஓரிரு பக்கங்கள் வரையில் 330 பனுவல்களும் பொது அறிவுப் பெட்டகமாகவே இருக்கிறது.
நூலாசிரியர் பொய் சொல்வாரா?, எம்.வி.வெங்கட்ராமின் நூலை தனது தந்தை பிரசுரம் செய்யாதது ஏன்?, நூலாசிரியரின் தாயின் குணங்கள்.. என்று பல்வேறு ருசிகரத் தகவல்களும் உள்ளன.
தான் மனதில் நினைத்ததை எழுதி நூலாக்கியுள்ளார். படிப்போரையும் தங்களது அனுபவங்களை எழுதவைக்க தூண்டுகோலாக இருக்கும் நூல் இது.