
கலகக் குரலாய் எழும் திரைமொழி- அ.இருதயராஜ்; பக்.198; ரூ.220; சவுத் விஷன் புக்ஸ், சென்னை-91; ✆ 94455 75740.
தமிழில் வெளிவந்த 15 திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பு இந்நூல். திரைப்பட விமர்சனம்தானே என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாதபடி இந்நூலில் உள்ள விமர்சனங்கள் உள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படங்கள் வணிகரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பதற்காக திரைப்படத்தை உருவாக்குபவர்கள் செய்யும் வணிக உத்திகளை 'ஜெயிலர்' திரைப்பட விமர்சனம் விவரிக்கிறது. 'சினிமா என்பது நல்ல பொழுதுபோக்கு அல்லது சமூக மாற்றத்திற்கான கருவி, மக்களைப் பண்படுத்துவதற்கான ஊடகம் என்பதையெல்லாம் கடந்து, ஒரு வியாபாரம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது' என்கிறார் நூலாசிரியர்.
ஜாதி ஒடுக்குமுறைகளைச் சித்திரிக்கும் 'பரியேறும் பெருமாள்', வாடகை வீட்டில் வசிப்பவர்களின் துயரங்களைக் கூறும் 'டுலெட்', தலித் மக்களின் துயரங்களைச் சொல்லும் 'அசுரன்', குற்ற உணர்வில் உழன்று கொண்டிருக்கும் நீதிபதியின் கதையைக் கூறும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் என இந்நூலில் உள்ள 15 திரைப்பட விமர்சனங்களும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நகர்ப்புறத்தில் உள்ள தொழிலாளர்கள் சந்திக்கின்ற 'அநீதி', படுகின்ற துன்பங்களைச் சொல்லும் அநீதி திரைப்படம் குறித்த விமர்சனத்தில், 'முதலாளியைக் கொலை செய்தால் தீர்வு கிடைக்காது; அநீதியை அமைப்பு ரீதியாக செயல்பட்டே எதிர்க்க வேண்டும்' என்கிறார் நூலாசிரியர். 'தலித் மக்களின் துயரைத்துடைக்க அவதார புருஷன் வர வேண்டும்' என்ற தவறான தீர்வை 'அசுரன்' முன்வைப்பதாக நூலாசிரியர் கூறுகிறார். சமுதாயக் கண்ணோட்டத்துடன் தமிழில் வெளிவந்த திரைப்படங்களை விமர்சிக்கின்ற சிறந்த நூல்.