
பாலும் பாவையும் அக்னிக்குஞ்சுகள் - மு.பரமசிவன்; பக்.264; ரூ.330; மோகனசுந்தரம் வெளியீடு, சென்னை-34; ✆ 9444297034.
மனிதர்களை விமர்சித்து எழுதிய விந்தன், சக எழுத்தாளர்களையும் விமர்சித்து எழுதியிருக்கிறார். அந்தவகையில் அவரின் படைப்பை விமர்சனம் செய்யும் வித்தியாசமான நூல் இது.
மக்கள் எழுத்தாளரான விந்தனின் 'பாலும் பாவையும்' நாவலைப் பலர் பாராட்டியதோடு, விமர்சித்தும் உள்ளனர். அந்த வகையில், முனைவர் பேரா.க.கைலாசபதி, வல்லிக்கண்ணன், பூவை எஸ்.ஆறுமுகம், கலைப்பித்தன், சிகரம் செந்தில்நாதன் ஆகியோரின் விமர்சனங்கள் நூலின் முதல் அத்தியாயமான 'விந்தன் பாலும் பார்வையும் சில பார்வைகள்' என்பதில் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது அத்தியாயமான 'விந்தன் அக்னிக்குஞ்சுகள்'- இல் பத்திரிகையாளர்கள், வாசகர்கள் எழுதிய பல்வேறு நூல்களில் வெளியான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தனிமனித ஒழுக்கம் ஆண்களுக்கும் தேவை, வாழ்க்கையின் லட்சியம், சமூகப் பிரச்னைகள், வாழ்க்கைச் சூழல், சாமானியர்களின் போராட்டம் என்று பல்வேறு விஷயங்களில் விந்தனின் பார்வையையும், அவருடைய நூல்களின் சிறந்த கருத்துகளையும் ஒருங்கே இந்நூல் தொகுத்துக் கொடுக்கிறது. 'ஒருவன் எத்தனை பெண்களை மணந்தாலும் எப்படி உயிர் வாழ்கிறாரோ,
அப்படியே ஒருத்தி எத்தனை ஆண்களை மணந்தாலும் உயிர் வாழ வேண்டும். அப்பொழுதுதான் பாலும் பாவையாகாது; பாவையும் பாலாக மாட்டாள்' என்று விந்தன் பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கிறார்.
பல அரிய தகவல்களையும், நல்ல கருத்துகளையும் வெளிப்படுத்தும் இந்த நூல், வித்தியாசமான நடையில் எழுதப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். விந்தனை அறிந்தோருக்கு ஒரு தொகுப்பு நூலாகவும், இளம்தலைமுறையினருக்கு விந்தனின் படைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்நூல் உள்ளது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.