
தமிழியலும் கோயில் பண்பாடும் - (தொகுப்பும் பதிப்பும்) ப.முருகன்; பக். 300; ரூ.300; துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த் துறை வெளியீடு, அரும்பாக்கம், சென்னை-106.
சென்னை துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது தமிழர்களின் பழமொழி. தமிழர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட கோயில்களின் வழிபாட்டு முறைகள், பண்பாடு, இலக்கியங்கள், மரபுகள், திருவிழாக்கள், பெண் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சடங்குகள், தீப வழிபாடு, உணவுப் பண்பாடு என்று பல்வேறு விஷயங்களை அலசி ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
மயிலை கபாலீஸ்வரர் கோயில், அழகர் கோயில், மங்கலதேவி கண்ணகி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பிரபல கோயில்களின் தல வரலாறு, அவற்றின் சிறப்புகள், இலங்கை கோயில்களின் சிறப்புகள் போன்றவையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
குடும்பத்தினரிடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலே குலதெய்வ வழிபாடுகள் அமைந்திருந்தன என்பன போன்ற வியப்புக்குரிய செய்திகள் நிறைந்திருக்கின்றன. குறி கேட்டல், முளைப்பாரி எடுத்தல், விலங்குகளுக்கு திருமணம் செய்துவைத்தல், மழைச்சோறு, கஞ்சிக் கலயம் எடுத்தல், கல்லெறித் திருவிழா, ஆடி மாதத் திருவிழாக்கள், அம்மன் திருவிழாக்கள் போன்ற வழிபாடுகள் குறித்த விளக்கங்கள் சிறப்புடையதாக இருக்கின்றன.