
வட்டத்துள் சிக்காத வானம் - இரா.மஞ்சுளா; பக்.120; ரூ.160; ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம், சென்னை-83; ✆ 9600398660.
'பெண்ணியம்' குறித்து அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். சொல்ல வரும் கருத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அதற்கு வலிமை சேர்க்கும் விதமாக சங்க இலக்கியம், திருக்குறள், பிரபலமான நாவல்கள், வரலாற்று நூல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மேற்கோள்காட்டி, தர்க்க
ரீதியாகவும், கேள்வி-பதில்களுடனும் 22 தலைப்புகளில் கட்டுரைகளாக வெளிப்படுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு.
எடுத்த எடுப்பிலேயே, அவர் தீர்க்கமாக ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆணுக்குப் பெண் சமமானவரா? என்ற கேள்வியே தவறு. அதை மாற்றி 'பெண்ணுக்கு ஆண் எல்லாவகையிலும் சமமானவரா?' என்று கேட்க வேண்டும் என்கிறார்.
'பெண் எனும் பிரபஞ்சம்', 'புதிரான பெண் மனம்', 'தண்டவாளத்தில் தள்ளிவிடுவதா காதல்?', 'கற்பிதங்களால் ஆன கோட்டை', 'பெண் உடல் மீது தீர்ப்பு எழுதாதீர்கள்', 'கருவறைக்குள் ஒலிக்கும் கொலுசொலி', 'எறும்புப் புற்றில் அரிசி அறுவடை' ஆகிய தலைப்புகளில் 'பெண்ணியம்' குறித்து சுவாரஸ்யமாகவும், சிந்திக்கும் விதமாகவும் இந்நூல் படைக்கப்பட்டு இருக்கிறது.
சமுதாய மாற்றத்தைத் தனிமனித மாற்றத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் தொடங்குவோம்; பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ அதை பொறுப்புடன் வளர்த்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்; பாலின ஏற்றத்தாழ்வுகளை நீக்க குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தைகளின் மனத்தில் ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் இல்லை; ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்கிற விதையை விதைப்போம் என ஆண்-பெண் சமத்துவத்துக்கான கருத்துகள் இந்நூலில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.