செம்மரக்காடு - கா.சு.வேலாயுதன்; பக்.122; ரூ.150; கதை வட்டம், கோவை-42; ✆ 9994498033.
இயற்கையோடு இயைந்து காடுகளே கதியென வாழ்ந்தவர் உயிர்ச்சூழல் மண்டல விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். செம்மரம் பற்றி தமிழகத்தில் பெரிய கவனத்தை ஏற்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. மரம் வளர்ப்பு மூலம் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்பதை வாழ்நாள் முழுக்கப் பேசி வந்தார். அதைச் செயலிலும் செய்து காட்டியவர்.
மரங்கள் இல்லாவிட்டால், உலகில் உயிரினங்கள் வாழ முடியாது. எந்த நிலமாக இருந்தாலும், அதில் மரங்களை வளர்க்க முடியும். மர வளர்ப்புக்கு மழைத் தண்ணீரே போதுமானது. நீங்கள் மரங்களை வளர்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டால் போதும், நிம்மதியாக இருக்கலாம். அதன் பிறகு, அந்த மரங்கள் உங்களைக் காப்பாற்றும் என்று அழுத்தமாகக் கூறியவர்.
பிழைக்க வழியில்லாமல் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் புலம்பெயரும் இக்காலத்தில், கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிற மண்ணிலேயே மரங்களை நடுவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது இவரின் கருத்து.
தன் வாழ்நாள் முழுவதும் காடுகளை உருவாக்க பணியாற்றிய அவருடைய அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டால், அது நம் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயன்படும். அவரின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் பணியை மிகச் சிரத்தையோடு மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர். இயற்கையுடன் இயைந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக உள்ளது.
செம்மரம் அறிமுகம் என்ற முதல் அத்தியாயத்தில் தொடங்கி, யார் இந்த இ.ஆர்.ஆர்.சதாசிவம், உயிர்த்தெழுந்த மரங்கள், செத்து விழுந்த தென்னை மரங்கள், செம்மரங்கள் வளர்ப்பது குற்றமா, உயிரியல் போர், நம் மண்ணில் வெளிநாட்டு மரங்கள் என 17 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மரங்களை நட்டு, மண்ணை செம்மைப்படுத்தும் விஞ்ஞானியின் செயல்முறையை முன்னிறுத்தியுள்ள குறிப்பிடத்தக்க நூல்.