Enable Javscript for better performance
நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி- Dinamani

சுடச்சுட

  

  நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 03rd September 2016 02:52 PM  |   அ+அ அ-   |    |  

  DSCN0725a

  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 123-வது தலமாக திருக்கோளிலி உள்ளது. தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது.


  இறைவன் பெயர்: கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர்
  இறைவி பெயர்: வண்டமர் பூங்குழலி
   


  இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும். சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

  எப்படிப் போவது?

  திருவாரூரில் இருந்து தென்கிழக்கே எட்டுக்குடி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. இத்தலத்துக்கு அருகில், திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன.

  ஆலய முகவரி

  அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில்,
  திருக்குவளை, திருக்குவளை அஞ்சல்,
  திருக்குவளை வட்டம்,
  நாகப்பட்டினம் மாவட்டம் – 610 204.

  இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதால், பிரம்மாவின் படைப்புத் தொழிலை அவரிடம் இருந்து இறைவன் பறித்து சாபம் இடுகிறார். தனது சாபம் நீங்க, பிரம்மா இத்தல இறைவனை தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார்.

  பிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட, அவரது கட்டுபாட்டில் இயங்கும் நவக்கிரகங்களாலும் தங்களது தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. நவக்கிரகங்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றனர்.

  நவகோள்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் கோளிலிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

  பிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

  கோவில் விவரம்

  திருக்கோளிலி தலம், தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிராகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்துக்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் திருக்குவளை என்றும் பெயர் பெற்றது. பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தல இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது.

  கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், இறைவன் கருவறை உள்ளது. கருவறையில் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், அதன் தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகார வலம் வரும்போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் லிங்க மூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப் பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.

  இத்தலத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை, இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய அற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர், சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச்சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி, நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச்செல்ல வகை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அந்தப் பதிகம் இதோ –

  நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்

  வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே

  கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

  ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே.


  வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

  விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே

  தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

  அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.


  பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய்

  மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே

  கோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

  ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே.


  சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ

  புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ

  கொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

  அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


  முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே

  பல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா

  கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான்

  அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


  குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

  பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே

  குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

  அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே.


  எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும்

  வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே

  செம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

  அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


  அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்

  பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்

  குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

  இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


  பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங்

  கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான்

  தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

  அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.


  கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை

  நல்லவர் தாம்பர வுந்திரு நாவலவூரன் அவன்

  நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்

  அல்லல் களைந்துல கின்அண்டர் வானுலகு ஆள்பவரே.


  என்று சுந்தரர் பதிகம் பாடி கேட்டுக்கொண்டதின் பேரில், அந்த நெல் மூட்டைகளை திருவாரூரில் உள்ள சுந்தரர் வீட்டில் சேர்ப்பித்தார். இப்பதித்தை ஓதும் யாவரும் தங்களது இன்னல்கள் களைந்து வானுலகில் வாழ்வர் என்று சுந்தரர் தனது கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai