Enable Javscript for better performance
குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி)- Dinamani

சுடச்சுட

  

  குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி)

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 05th September 2016 05:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DSCN0278

   

  இந்த ஆண்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி, செவ்வாய்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினத்துக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி மாதம் 18-ம் நாள் (ஆடிப்பெருக்கு) ஆகிய சிறப்புகளும் உள்ளன. ஆக, இப்போது குரு பரிகாரத் தலமான ஆலங்குடியை பற்றி அறிந்துகொள்வோம்.

  காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 98-வது தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

  இறைவன் பெயர்: ஆபத்சகாயேசுவரர்

  இறைவி பெயர்: ஏலவார் குழலியம்மை

  இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

  எப்படிப் போவது?

  கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில், கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

  ஆலய முகவரி
  அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்,
  ஆலங்குடி,
  வலங்கைமான் வட்டம்,
  திருவாரூர் மாவட்டம் – 612 801.
  தொலைபேசி: 04374 - 269407

  இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும், இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.

  இக்கோவில், திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தர வேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க, அவரது தலையை வெட்டிவிடும்படி முசுகுந்தன் கூறினான். கொலையாளி, அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சத்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி, இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.

  மற்றுமொரு புராணச் செய்தியின்படி, தேவர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடையும்போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்ட தலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால், இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

  திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கப் பெருமானுக்கு 9 பரிவாரத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஆலங்குடி, தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது. மற்ற பரிவாரத் தலங்கள் முறையே, 1. திருவலஞ்சுழி (விநாயகர்), 2. சுவாமிமலை (முருகன்), 3. திருவாவடுதுறை (நந்திகேஸ்வரர்), 4. சூரியனார்கோவில் (நவக்கிரகம்). 5. திருவாப்பாடி (சண்டிகேஸ்வரர்), 6. சிதம்பரம் (நடராஜர்), 7. சீர்காழி மற்றும் 8. திருவாரூர் (சோமஸ்கந்தர்).

  கோவில் அமைப்பு

  கோயிலின் தெற்குக் கோபுரம் 5 நிலைகளை உடையது. கிழக்கிலுள்ள கோபுரம் சிறியது. இத்தல விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிராகாரத்தில், அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருக்கிறது. அடுத்து வரும் உள்பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் இருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின்போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

  இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும். இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்துகொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.

  இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் பிரபலமானவர். குருவே தட்சிணாமூர்த்தியாகவும், தட்சிணாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள். ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ்பாடிய மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவி சமேதராக வரதராஜப் பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில், திரளான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இந்த ஐந்துமே காவிரியின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாமப் பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக்கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவை. இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்,

  1. திருக்கருகாவூர் (முல்லை வனம்) - விடியற்கால வழிபாடு.

  2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாடு.

  3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாடு.

  4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேர வழிபாடு.

  5. திருக்கொள்ளம்புதூர் (வில்வ வனம்) - அர்த்தஜாமப் பூஜை வழிபாடு.

  சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர், தன் தலயாத்திரையின்போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

  பிற குரு ஸ்தலங்கள்

  திட்டை

  தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ. சென்றால் திட்டை என்ற தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள திட்டை என்ற ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திட்டை தலமும் ஒரு சிறந்த குரு பரிகாரத் தலம். இத்தலத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை.

  திருவலிதாயம்

  சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம், தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில், பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம் குரு பகவானுக்கு இவ்வாலயத்தில் தனிச் சந்நிதி இருக்கிறது. குரு பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்புண்டு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai